சுடச்சுட

    

    கண்ணன் எம்.பி. மீது கட்சித் தலைமை உரிய நடவடிக்கை எடுக்கும்

    By புதுச்சேரி,  |   Published on : 29th April 2014 03:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மக்களவைத் தேர்தலில் பணிபுரியாத கண்ணன் எம்.பி. மீது கட்சித் தலைமை உரிய நடவடிக்கை எடுக்கும் என புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் கூறினார்.

    புதுச்சேரி காங்கிரஸ் கட்சித் தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

    மக்களவைத் தேர்தலில் சிறப்பாக கட்சி நிர்வாகிகள் பணியாற்றினர். அதே நேரத்தில் ஒரு சிலர் வேலை செய்யவில்லை என ஆதாரங்களுடன் புகார் வந்துள்ளது.

    எம்பி கண்ணன் மக்களவைத் தேர்தலில் பணியாற்றவில்லை. இதுதொடர்பாக டெல்லி தலைமைக்கு ஏற்கெனவே புகார் அனுப்பியுள்ளோம். தேர்தல் முடிந்த பிறகு கிடைத்த ஆதாரப்பூர்வ புகார்களையும் அனுப்பியுள்ளோம். தக்க நேரத்தில் அவர் மீதும், கட்சியில் பணியாற்றாதவர்கள் மீதும் கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்கும்.

    காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக ராஜிநாமா கடிதம் அளித்த அவரது ஆதரவாளர்கள் பலர், நேரில் வந்து கட்டாயத்தின்பேரில் அதில் கையெழுத்திட்டதாகத் தெரிவித்தனர். அதனால் அவர்கள் கடிதம் ஏற்கப்படவில்லை. ராஜிநாமா செய்ய விரும்புவோர் நேரில் கடிதம் அளித்தால் மட்டுமே ஏற்போம்.

    அதன் அடிப்படையில் சிலர் கடிதத்தை ஏற்றோம். ஒரு சிலர் எம்பி கண்ணனுடன் சேர்ந்து கட்சிக்கு எதிராக வேலை செய்துள்ளனர். மக்களவைத் தேர்தலுக்கு உழைத்த நிர்வாகிகளையும், கட்சிக்காரர்களையும் கொண்டே வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் பணியாற்றுவோம்.

    ஆளும் கட்சியினரின் செயல்பாடு, ஆட்சி முறையை பார்த்து மக்கள் ஏமாற்றத்திலும், வருத்தத்திலும் உள்ளனர். ஏப்ரல் மாதம் இலவச அரிசி போடாததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அறிவிக்கப்படாத மின்தடை, பல துறைகளில் ஊதியம் வழங்காத நிலை என அனைத்துத் துறைகளிலும் ரங்கசாமி அரசு தோல்வியடைந்துள்ளது என்றார் சுப்பிரமணியன்.

    பேட்டியின்போது பொதுச்செயலர் ஆறுமுகம், முன்னாள் எம்எல்ஏ ஜெயமூர்த்தி, இளைஞர் காங்கிரஸ் தலைவர் இளையராஜா மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai