சுடச்சுட

  

  புதுவை முத்தியால்பேட்டை பகுதியில் நிலவும் தொடர் மின்வெட்டைக் கண்டித்து அப்பகுதி மக்கள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சாலை மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

  புதுவை முத்தியால்பேட்டை சாலைத் தெரு பகுதியில் தொடர் மின்வெட்டால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் 100-க்கும் மேற்பட்டோர், ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணிக்கு மகாத்மா காந்தி சாலையில் திடீர் மறியல் செய்தனர்.

  இதுகுறித்து அவர்கள் கூறியது: சாலைத் தெரு உள்ளிட்டப் பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக மின் வெட்டு தொடர்ந்து வருகிறது. இரவு நேரங்களில் மின் வெட்டு ஏற்படுவதால் மக்கள் தூக்கமின்றி அவதிப்பட வேண்டியுள்ளது.

  பழுதடைந்த பழைய மின்சார கேபிளை மாற்றித் தருவதாக கூறிய மின் வாரியத்தினர், மாற்றித் தராமல் தாற்காலிகமாக சரி செய்துவிட்டுச் செல்வதால், மின்சார கேபிள் அடிக்கடி எரிந்துபோகிறது.

  இதனால் மின்வெட்டு ஏற்படுகிறது. மின் வெட்டு பிரச்னையை போக்க புதிய கேபிளை மாற்றித் தர வேண்டும் என்றனர்.

  தகவல் அறிந்து வந்த புதுவை காவல் கண்காணிப்பாளர் பிரவீன் திரிபாதி, சப் இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீஸார் அவர்களை சமாதானப்படுத்தினர்.

  அங்கு வந்த மின்வாரிய ஊழியர்கள், பழுதை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதனையடுத்து சாலை மறியல் செய்த மக்கள் கலைந்து சென்றனர்.

  இதனைத் தொடர்ந்து, திங்கள்கிழமை காலை மின்வாரிய அதிகாரிகள் சாலைத் தெரு பகுதியில் நேரில் ஆய்வு செய்தனர்.

  இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியது: சாலைத் தெரு, அதனருகே உள்ள இரண்டு வீதிகளில் அதிக மின்னழுத்தம் (ஓவர் லோடு) காரணமாக மின்சார கேபிள் பழுதாகியுள்ளது.

  அதனை மாற்றி இரண்டு புதிய கேபிள் அமைக்கப்பட உள்ளது. அப்பணிகளும் தொடங்கியுள்ளது. பழைய கேபிள்களில் உள்ள மின் இணைப்புகளை நீக்கி புதிய கேபிள் அமைக்க இரண்டு, மூன்று நாள்கள் வரை ஆகும்.

  அதன் பின்னர் மின்வெட்டு பிரச்னை இருக்காதென்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai