சுடச்சுட

    

    புதுச்சேரி பல்கலைக்கழகப் பிரச்னை: சுதந்திரமான நீதி விசாரணை நடத்த வலியுறுத்தல்

    By புதுச்சேரி,  |   Published on : 29th April 2014 03:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சுதந்திரமான நீதி விசாரணை நடத்த வேண்டும் என மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.

    இதுதொடர்பாக அதன் பொதுச் செயலர் கோ.சுகுமாரன் வெளியிட்ட அறிக்கை:

    கடந்த 6ஆம் தேதி தமிழ்த்துறை மாணவர் ராதாகிருஷ்ணனை பேராசிரியர்கள் ஹரிஹரன், பூஷன் சுதாகர் மற்றும் 2 காவலர்கள் சேர்ந்து மாணவியர் விடுதியில் மர்ம நபர் நுழைந்த சம்பவம் தொடர்பாக, அதை அவர் செய்ததாக ஒப்புக் கொள்ளுமாறு கூறி கடுமையாகத் தாக்கி உள்ளனர்.

    27 மணி நேரம் அவரை காவலில் வைத்திருந்து சித்ரவதை செய்துள்ளனர். இதுகுறித்து மாணவன் தந்த புகாரின் பேரில் காலாப்பட்டு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மாணவனுக்கு நீதி கிடைக்கச் செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம் மேற்கொண்டதையடுத்து, பல்கலைக்கழக நிர்வாகம் பெங்களூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி நரசிம்மன் தலைமையில், புதுவை ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி வீரேந்திரநாத், எஸ்.பி. தமிழரசி ஆகியோர் கொண்ட மூவர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    விசாரணைக் குழு அமைக்கும்போது குழுவின் விசாரணை வரம்பு, நோக்கம் குறித்து தெளிவாக வரையறுக்க வேண்டும். ஆனால் தற்போதைய குழுவுக்கு 6ஆம் தேதி நடந்த சம்பவங்கள் குறித்து மட்டுமே விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    விசாரணைக் குழுவினர் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் குறித்து அறிந்தவர்கள் விசாரணை குழு முன்பு ஆஜராகி வாக்குமூலம் தரலாம் என்ற அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

    எஸ்.பி. தமிழரசியை குழுவில் நியமிக்கும் முன்பு அரசிடம் அனுமதி பெறவில்லை.

    இதனால் அவர் குழுவில் இடம்பெற முடியவில்லை. இதனால் முழுமையான விசாரணைக் குழு இல்லாத நிலை உள்ளது.

    பாதிக்கப்பட்ட மாணவனுக்கு போதிய அவகாசம் தராமல் 25ஆம் தேதி இரவு 10 மணிக்கு சம்மன் அளித்து மறுநாள் விசாரணைக்கு வர வேண்டும் எனக் கூறியுள்ளனர். விசாரணைக்குழு முன்பு ஆஜரான மாணவன் ராதாகிருஷ்ணனின் வாக்குமூலத்தையும் முழுமையாக பதிவு செய்யவில்லை. அவர்களது கேள்விகளுக்கு பதிலளித்தால் போதும் எனக் கூறியுள்ளனர்.

    மாணவர்களுக்கு தேர்வு நடப்பதால் பலரால் குழு முன்பு ஆஜராக முடியவில்லை. இதுகுறித்து கவலைப்படாமல் பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களை குழு முன்பு ஆஜராகுமாறு கூறுகிறது.

    மேலும் குற்றம் சாட்டப்பட்டுள்ள பேராசிரியர் ஹரிஹரனுக்கு ஆதரவாக பல்வேறு துறைத் தலைவர்கள் குழு வுõசாரணைக்குச் சென்றால் மதிப்பெண்களை குறைத்து விடுவோம் என மாணவர்களை மிரட்டி வருவதாகத் தெரிகிறது.

    பல்கலைக்கழக நிர்வாகம் குற்றம் சாட்டப்பட்ட நால்வரையும் உடனே சஸ்பெண்ட் செய்ய வேண்டும். மாணவனுக்கு எதிரான மனித உரிமை மீறல் குறித்து விசாரணை செய்யும் குழு, அவசரமாகவும், ரகசியமாகவும் விசாரணை நடத்துவது, குற்றம் சாட்டப்பட்டோரை காப்பாற்றவே எனக் கருத வேண்டியுள்ளது.

    எனவே ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் சுதந்திரமான விசாரணை குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்றார் சுகுமாரன்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai