சுடச்சுட

    

    வீராம்பட்டினத்தில் மீனவப் பெண்கள் உண்ணாவிரதம்

    By புதுச்சேரி  |   Published on : 29th April 2014 03:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவை வீராம்பட்டினம் கிராமத்தில் மீனவர்கள் மீதான வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி திங்கள்கிழமை மீனவப் பெண்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

    புதுவை வீராம்பட்டினம் மீனவ கிராமத்தில் 2,000-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 5,000க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். சுனாமி வீடு கட்டித்தர வேண்டும் எனக் கோரி அவர்கள் நீண்ட காலமாக போராடி வருகின்றனர். மக்களவைத் தேர்தலை புறக்கணிப்பதாகவும் மீனவப் பஞ்சாயத்தார் மூலம் ஏற்கெனவே அறிவித்திருந்தனர்.

    அதன்படி கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். அதில் ஒரு தரப்பினர் தேர்தலில் பங்கேற்றதால், 37 சதவீதம் வாக்குகள் பதிவாயின. இதனால் ஆத்திரமடைந்த மீனவப் பஞ்சாயத்தார், வாக்குப் பதிவில் பங்கேற்றவர்களைத் தாக்கியதாகத் தெரிகிறது.

    இதுகுறித்த புகாரின் பேரில், பஞ்சாயத்துத் தலைவர் விஸ்வநாதன் உள்ளிட்ட 40 பேர் மீது, அரியாங்குப்பம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அவர்களைத் தேடி வருகின்றனர்.

    அப்பகுதியில் பதற்றம் நிலவியதால் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. துப்பாக்கி ஏந்திய போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    இதனையடுத்து, பஞ்சாயத்துத் தலைவர் விஸ்வநாதன் உள்ளிட்ட 3 பேரை ஊருக்குள் நுழைய தடை விதிக்க பரிந்துரைத்து அரியாங்குப்பம் போலீஸார், துணை மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்தனர். அது ஆய்வில் உள்ளது.

    உண்ணாவிரதம்: இந்நிலையில், அப்பகுதி மீனவப் பெண்கள், வீராம்பட்டினம் செங்கேணியம்மன் கோவில் எதிரே திங்கள்கிழமை காலை திரண்டு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள் கூறியது: காவல் துறையினர் வழக்குப் போட்டு தேடி வருவதால், குடும்பத்தில் உள்ள ஆண்கள் பலர் வீட்டுக்கு வர அச்சப்பட்டு வெளியில் உள்ளனர். இதனால், நாங்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளோம். மீனவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற வேண்டும். பஞ்சாயத்தார் மீதான ஊருக்குள் நுழைவதற்கான தடை உத்தரவினையும் திரும்பப் பெற வேண்டும் என்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai