சுடச்சுட

  

  கூடுதல் கிளை அலுவலகங்கள் திறக்க போக்குவரத்துத் துறை திட்டம்

  By  புதுச்சேரி  |   Published on : 30th April 2014 08:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரி போக்குவரத்துத் துறை அலுவலகத்தில் நிலவும் இட நெருக்கடியைக் கருத்தில் கொண்டும், பொதுமக்கள் பயன்பெறும் வகையிலும் கூடுதல் கிளை அலுவலகங்கள் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
   புதுச்சேரி யூனியன் பிரதேச நிர்வாகத்தின் ஒரு அங்கமாக போக்குவரத்துத் துறை இயங்கி வருகிறது. இதன் அலுவலகம் 100 அடி சாலையில் அமைந்துள்ளது. பொதுமக்களுக்கு 30 வகையான சேவைகள் இந்த அலுவலகம் மூலம் வழங்கப்படுகின்றன.
   போக்குவரத்துத் துறை செயலாளர் தலைமையில் போக்குவரத்து ஆணையர், துணை போக்குவரத்து ஆணையர், மண்டல போக்குவரத்து அலுவலர் உள்பட பல்வேறு அதிகாரிகளின் நிர்வாகத்தின் கீழ் இத்துறை செயல்படுகிறது.
   புதுச்சேரி 100 அடி சாலை, காரைக்கால், ஏனாம், மாஹே உள்ளிட்ட இடங்களில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. அனைத்து சேவைகளும் கணினி மயமாக்கப்பட்டுள்ளன.
   குறிப்பாக ஓட்டுநர் உரிமங்கள் ஸ்மார்ட் கார்ட் மூலமும், வாகனங்களுக்கு அதி நவீன நம்பர் பிளேட்டுகளும் வழங்கப்படுகின்றன. அதே போல் வாகனப் பதிவு ஆவணமும் ஸ்மார்ட் கார்ட் முறையிலேயே வழங்கப்படுகிறது.
   கடும் இட நெருக்கடி: புதுச்சேரி நகரம் தற்போது நாளுக்கு நாள் வளர்ந்து வருவதால் இரு சக்கர வாகனங்கள், கார்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெறுவோர் 100 அடி சாலையில் உள்ள போக்குவரத்துத் துறை அலுவலகத்திலேயே ஓட்டிக் காண்பிக்க வேண்டும். நான்கு சக்கர வாகன ஓட்டுநர் உரிம் பெற விண்ணப்பித்துள்ளோர் மேட்டுப்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள திடலில் ஓட்டிக் காண்பிக்க வேண்டும்.
   புதுச்சேரி, உழவர்கரை நகராட்சி, பாகூர், வில்லியனூர், மதகடிப்பட்டு உள்பட 20 கி.மீ.தூரத்தில் வசிப்போரும் புதுச்சேரிக்கு வந்தே ஓட்டுநர் உரிமம் பெற வேண்டி உள்ளதால் போக்குவரத்துத் துறை அலுவலகத்தில் கடும் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
   8 போடும் இடம் மிகவும் குறுகியதாக உள்ளதால் போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கும், உரிமம் பெற வருவோருக்கும் சிக்கல் ஏற்படுகிறது.
   காலிப்பணியிடங்களால் கடும் பாதிப்பு: அதே போல் போக்குவரத்து துறையில் உள்ள காலிப்பணியிடங்களால் அலுவலகப் பணிகள், களப்பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு நிலைகளில் அங்கீகரிக்கப்பட்ட 33 பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை முழுவதுமாக நிரப்பினால்தான் பொதுமக்களுக்கு சிறந்த சேவை வழங்க முடியும்.
   மூன்று புதிய கிளை அலுவலகங்கள்: புதுச்சேரி 100 அடி சாலையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிலவும் இட நெருக்கடியைக் கருத்தில் கொண்டும், கிராமப்புறங்களில் இருந்து வரும் மக்களின் நலனைக் கருதியும் புதிதாக 3 கிளை அலுவலகங்களை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
   பாகூர், மதகடிப்பட்டு, வில்லியனூர் உள்ளிட்ட இடங்களில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகங்கள் திறக்கப்பட உள்ளன. இதன் மூலம் பொதுமக்களுக்கு எளிதில், துரிதமான சேவை வழங்க முடியும் என போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai