சுடச்சுட

    

    வீராம்பட்டினம் தேர்தல் தகராறுக்குத் தீர்வு:  ஆட்சியரிடம் மீனவ பெண்கள் கோரிக்கை

    By  புதுச்சேரி,  |   Published on : 30th April 2014 08:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வீராம்பட்டினத்தில் தேர்தல் புறக்கணிப்பு தொடர்பாக தொடர்ந்து வரும் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்று அப்பகுதி மீனவப் பெண்கள் புதுவை ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை கோரிக்கை வைத்தனர்.
     புதுவை வீராம்பட்டினத்தில், சுனாமி வீடு கிடைக்காததால், போராட்டம் நடத்தி வந்த மீனவ பஞ்சாயத்தார், ஏப்ரல் 24ஆம் தேதி நடைபெற்ற மக்களவைத் தேர்தலை புறக்கணித்தனர். இதனை மீறி ஒரு தரப்பினர் தேர்தலில் பங்கேற்று வாக்களித்தனர்.
     இதனை பஞ்சாயத்தார் தரப்பினர் தட்டிக்கேட்டதில் மோதல் ஏற்பட்டதையடுத்து, பஞ்சாயத்து தலைவர் விஸ்வநாதன் உள்ளிட்ட 40 பேர் மீது அரியாங்குப்பம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அவர்களைத் தேடி வருகின்றனர்.
     இந்நிலையில், பஞ்சாயத்து தலைவர் விஸ்வநாதன் உள்ளிட்ட 3 பேரையும் ஊருக்குள் நுழைய தடை விதித்து போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனைக் கண்டித்து அப்பகுதி மீனவப் பெண்கள் திங்கள்கிழமை உண்ணாவிரதம் இருந்தனர்.
     அவர்களது கோரிக்கைகள் செவிசாய்க்கப்படாததால், அவர்கள் செவ்வாய்க்கிழமை புதுவை சாரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் மாவட்ட ஆட்சியர் பா.தீபக்குமாரை நேரில் சந்தித்து மனு கொடுத்து முறையிட்டனர்.
     அப்போது அவர்கள் கூறியது: வீராம்பட்டினம் மீனவ கிராமத்துக்கு சுனாமி வீடு கேட்டு நீண்ட நாள் போராடியும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்காக கடந்த 19ஆம் தேதி பஞ்சாயத்து கூட்டம் கூட்டி தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று மக்கள் தெரிவித்தனர். அதன்படி பஞ்சாயத்தார் முடிவு செய்தனர்.
     பிரச்னைகளுக்குக் காரணம் அரசியல்வாதிகள்தான். மோதலுக்கும் கிராம மக்களுக்கும் தொடர்பில்லை. எனவே மீனவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும். வெளியில் உள்ள ஆண்கள் ஊருக்குள் வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். அவர்களது மனுவைப் பெற்ற ஆட்சியர் தீபக்குமார், "போராட்டத்தைக் கைவிட்டு சகஜ நிலைக்கு செல்லுங்கள். வீராம்பட்டினத்துக்கு நேரில் வந்து விசாரித்து, பிரச்னைக்கு தீர்வு காணப்படும்' என தெரிவித்ததாக அவர்கள் கூறினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai