Enable Javscript for better performance
மீனவர்கள் எதிர்ப்பு:  பிரசாரம் செய்யாமல் திரும்பிச் சென்றார் முதல்வர் ரங்கசாமி- Dinamani

சுடச்சுட

    

    மீனவர்கள் எதிர்ப்பு:  பிரசாரம் செய்யாமல் திரும்பிச் சென்றார் முதல்வர் ரங்கசாமி

    By  புதுச்சேரி,  |   Published on : 27th March 2014 08:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி வம்பாகீரப்பாளையத்தில் புதன்கிழமை தேர்தல் பிரசாரத்துக்கு வந்த முதல்வர் ரங்கசாமியை மறித்த மீனவர்கள், அவரை பிரசாரம் செய்ய விடாமல் திருப்பி அனுப்பினர்.
     புதுச்சேரி உப்பளம் தொகுதியில் வம்பாகீரப்பாளையம், கீரப்பாளையம் மீனவ கிராமங்கள் உள்ளன. கடந்த 2004ஆம் ஆண்டு சுனாமி பேரலையால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு குடியிருப்புகளை அரசு கட்டித் தரவில்லை என இப்பகுதி மீனவர்கள் பல கட்டப் போராட்டங்களை நடத்தினர்.
     சட்டப்பேரவை, மீன்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டம் நடத்தினர். சுதந்திர தினம், குடியரசு தினத்தன்றும் கடலில் கறுப்புக்கொடி ஏந்தி ஊர்வலம் வந்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
     இந்நிலையில், கீரப்பாளையம் அங்காளம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு அப்பகுதியில் பிரசாரம் செய்ய என்.ஆர்.காங்கிரஸ் தொகுதி பொறுப்புக்குழுத் தலைவர் புஸ்சி ஆனந்து திட்டமிட்டிருந்தார். முதல்வர் ரங்கசாமியை பிரசாரத்துக்காக அழைத்திருந்தார். அதன்படி புதன்கிழமை பிற்பகல் 12 மணியளவில் முதல்வர் ரங்கசாமி அங்கு வந்தார்.
     இதையறிந்த மீனவர்கள், கீரப்பாளையம் மீனவ பஞ்சாயத்துத் தலைவர் தலைமையில் அங்கு திரண்டனர். சுனாமி குடியிருப்புகளை கட்டித் தருவதாக கடந்த பேரவைத் தேர்தலில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், மீண்டும் பிரசாரத்துக்கு ஊருக்குள் வரக்கூடாது என அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
     முதல்வர் ரங்கசாமியும், என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர்களும் அவரை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் முதல்வரின் சமாதானத்தை மீனவர்கள் ஏற்கவில்லை. இதையடுத்து முதல்வர் ரங்கசாமி அங்கு பிரசாரம் செய்யாமல் காரில் ஏறி கிளம்பிச்சென்றார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai