Enable Javscript for better performance
குடியரசு தினம்: கொடியேற்றினார் முதல்வர் ரங்கசாமி- Dinamani

சுடச்சுட

  

  குடியரசு தினம்: கொடியேற்றினார் முதல்வர் ரங்கசாமி

  By புதுச்சேரி  |   Published on : 27th January 2015 03:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரி உப்பளம் இந்திரா காந்தி மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் துணைநிலை ஆளுநருக்கு பதிலாக முதல்வர் என்.ரங்கசாமி தேசிய கொடியேற்றினார்.

  66-வது குடியரசு தின விழா மாநில அரசு சார்பில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

  குடியரசு தினத்தில் ஆளுநர் தான் கொடியேற்றுவது வழக்கம்.

  ஆனால் புதுவை யூனியன் பிரதேசத்தில் கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் துணைநிலை ஆளுநராக இருந்த கட்டாரியாவை மத்திய அரசு பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டது.

  அவருக்கு பதிலாக அந்தமான் துணைநிலை ஆளுநர் ஏ.கே.சிங் புதுவைக்கு கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டார். கடந்த 7 மாதங்களாக புதுவையை ஏ.கே.சிங் தான் நிர்வகித்து வருகிறார். நிரந்தர துணைநிலை ஆளுநரை மத்திய அரசு நியமிக்கவில்லை.

  இந்நிலையில், குடியரசு தின விழா அன்று அந்தமானிலும் ஏ.கே.சிங் கொடியேற்ற வேண்டி இருந்ததால், புதுவையில் அவரால் தேசிய கொடியை ஏற்ற இயலவில்லை. அவருக்கு பதிலாக தலைமைச் செயலர் கொடியேற்றுவார் எனக் கூறப்பட்டது. இதனிடையே முதல்வர் ரங்கசாமியே குடியரசு தின விழாவிலும் தேசிய கொடியேற்றினார்.

  உப்பளம் இந்திரா காந்தி மைதானத்துக்கு காலை 9.10 மணிக்கு வந்த முதல்வரை தலைமைச் செயலர் சேட்டன்சாங்கி, ஐ.ஜி. பிரவீர்ரஞ்சன் ஆகியோர் வரவேற்று அழைத்து வந்தனர். அதைத்தொடர்ந்து அவர் தேசியக்கொடியை ஏற்றி, திறந்த ஜீப்பில் சென்று போலீஸாரின் அணிவகுப்பையும் பார்வையிட்டார்.

  பின்னர் மேடை திரும்பிய ரங்கசாமி சிறப்பாக பணியாற்றிய போலீஸாருக்கு விருதுகள், பதக்கங்களையும், இறுதித் தேர்வுகளில் சாதனை புரிந்த பள்ளிகளுக்கு சுழற்கேடயங்களையும் வழங்கினார்.

  அணிவகுப்பு: இதையடுத்து பல்வேறு படைப் பிரிவினர்களின் கண்கவர் அணிவகுப்பு நடந்தது. காவல் துறை, இந்திய ரிசர்வ் பட்டாலியன், ஊர்க்காவல் படை, தீயணைப்புத் துறை, முன்னாள் ராணுவத்தினர், தேசிய மாணவர் படை, சாரண, சாரணியர், என்.எஸ்.எஸ்., சி.எஸ்.எஸ். திட்டம், அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் அணிவகுப்பு மரியாதை நடந்தது. அணிவகுப்பு மரியாதையை ரங்கசாமி ஏற்றுக்கொண்டார்.

  இதைத்தொடர்ந்து புதுச்சேரி அரசின் பல்வேறு துறைகளின் அலங்கார வண்டிகள் அணிவகுப்பு நடந்தது. தொடர்ந்து அரசு, தனியார் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. அணிவகுப்பு, அலங்கார வண்டி, கலை நிகழ்ச்சி ஆகியவற்றில் சிறந்து விளங்கிய பிரிவுகளுக்கு முதல்வர் ரங்கசாமி விருதுகளை வழங்கினார்.

  பேரவைத் தலைவர் வ.சபாபதி, அமைச்சர்கள் பெ.ராஜவேலு, தி.தியாகராஜன், என்.ஜி.பன்னீர்செல்வம், பேரவை துணைத் தலைவர் டி.பிஆர்.செல்வம், எம்.பி. ஆர்.ராதாகிருஷ்ணன், எம்எல்ஏக்கள் வல்சராஜ், கல்யாணசுந்தரம், கார்த்திகேயன், வைத்தியநாதன், எம்.விஸ்வேஸ்வரன், வெ.பாலன், முன்னாள் முதல்வர் ஆர்.வி.ஜானகிராமன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

  போலீஸார், பள்ளிகளுக்கு சிறப்பு விருதுகள்: சிறந்த சேவை புரிந்த போலீஸார், சிறந்த தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு விருதுகளை முதல்வர் ரங்கசாமி குடியரசு தின விழாவில் வழங்கினார்.

  பெரியகடை காவல்நிலைய காவல் உதவி ஆய்வாளர் சஜித், சிறப்பு நிலை தலைமைக் காவலர் அசோக்குமார் ஆகியோருக்கு சிறப்பான பணிக்காக துணைநிலை ஆளுரின் பதக்கம் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பள்ளி இறுதி தேர்வுகளில் சாதனை புரிந்த பள்ளிகளுக்கு முதல்வர், கல்வி அமைச்சர் சுழற்கேடயங்களை முதல்வர் வழங்கினார்.

  10-ம் வகுப்பு பொதுத் தேர்வு: புதுவை அமலோற்பவர் மேல்நிலைப்பள்ளி, பெத்திசெமினார் பள்ளி, லாஸ்பேட்டை குளூனி பெண்கள் பள்ளி, சாரதாம்பாள் பேட்ரிக் மெட்ரிக் பள்ளி, புதுவை செவன்த்டே அட்வன்டிஸ்ட் பள்ளி, காரைக்கால் அம்மையார் அரசு உதவி பெறும் பள்ளி, அரியூர் இந்தோ சாரிடபிள் பள்ளி, மடுவப்பேட் சங்கர வித்யாலயா பள்ளி, திருக்கனூர் சுப்பிரமணிய பாரதி ஆங்கில மேல்நிலைப் பள்ளி, முத்தியால்பேட்டை புனித சூசையப்பர் அரசு உதவி பெறும் பள்ளி, காரைக்கால் எஸ்ஆர்விஎஸ் நேஷனல் பள்ளி, மங்கலட்சுமி ஆல்பா மெட்ரிக் பள்ளி, ஏம்பலம் பாலாஜி ஆங்கில பள்ளி, ஜெயராணி பள்ளி, கோட்டுச்சேரி சர்வைட் ஆங்கில பள்ளி, நயினார்மண்டபம் அன்னை தெரசா மாதிரி பள்ளி, முத்தியால்பேட்டை நியூ மாடர்ன் வித்யா மந்திர், ரெட்டியார்பாளையம் தூய இருதய மரியன்னை பள்ளி, கரியமாணிக்கம் ஹோலி பிளவர் பள்ளி, நெல்லித்தோப்பு தூய இருதய மரியன்னை பள்ளி, வாதானுர் அன்னை சாரதா தேவி அரசு பள்ளி, வில்லியனூர் தூய இருதய மரியன்னை அரசு உதவி பெறும் பெண்கள் பள்ளி, முத்தியால்பேட்டை ஸ்ரீஅரவிந்தர் பள்ளி, தொண்டமாநத்தம் தீப ஒளி பள்ளி, கதிர்காமம் தில்லையாடி வள்ளியம்மை அரசு பள்ளி, காட்டேரிக்குப்பம் ஸ்ரீஅன்னை ராணி கான்வென்ட் பள்ளி, கதிர்காமம் கேஎஸ்பி பள்ளி, திருக்கனுர் போன்நேரு பள்ளி, காலாப்பட்டு ஜோதி வள்ளலார் பள்ளி, திருவண்டார்கோவில் நவதுர்கா ஆங்கிலப்பள்ளி, அரியூர் ராமச்சந்திரா வித்யாலயா பள்ளி, சேதராப்பட்டு டிஏஎஸ் ஆங்கிலப்பள்ளி, முத்திரையர்பாளையம் முத்திரையர் மேல்நிலைப்பள்ளி, அரும்பார்த்தபுரம் புளூஸ்டார் கான்வென்ட் ஆங்கிலப்பள்ளி ஆகிய 34 பள்ளிகள் பத்தாம் வகுப்பு தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றன. அப்பள்ளிகளுக்கு சுழற்கேடயத்தை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.

  தொடர்ந்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 2-வதாக தேர்ச்சி பெற்ற அரியாங்குப்பம் துய இருதய அன்னை, காரைக்கால் நிர்மலா ராணி பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு கல்வி அமைச்சரின் சுழற்கேடயமும், மேல்நிலைப்பள்ளி பொதுத்தேர்வில் மிகச்சிறந்த தேர்ச்சி பெற்ற கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு கல்வி அமைச்சரின் சுழற்கேடயமும் வழங்கப்பட்டது.

  12-ம் வகுப்பு பொதுத் தேர்வு: அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளி, ஆதித்யா வித்யாஸ்ரமம், பேட்ரிக் பள்ளி, குளூனி பள்ளி, ஆல்பா மெட்ரிக், உறுவையாறு ஆச்சார்யா சிக்ஷô மந்திர், செவனத்டே அட்வன்டிஸ்ட் பள்ளி, காரைக்கால் எஸ்ஆர்விஎஸ், நிர்மலாராணி, அரியாங்குப்பம் தூய இருதய மரியன்னை, மடுவப்பேட் ஸ்ரீசங்கர வித்யாலயா, கரியமாணிக்கம் ஹோலி பிளவர், வில்லியனூர் சம்பூர்ண வித்யாலயா, காலாப்பட்டு ஜோதி வள்ளலார், குறிஞ்சிநகர் டான்பாஸ்கோ, ராஜாஜி நகர் மாருதி மெட்ரிக், ஏம்பலம் பாலாஜி ஆங்கில பள்ளி, முத்தியால்பேட்டை ஸ்ரீஅரவிந்தர், கூடப்பாக்கம் ஜவகர், பிச்சவீரன்பேட் ஸ்டேன்ஸ்போர்டு, அரும்பார்த்தபுரம் புளூஸ்டார் ஆகிய பள்ளிகள் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்றதற்காக பேராயரின் சுழற்கேடயமும், பல்கலைக்கழக துணைவேந்தரின் சுழற்கேடயமும் வழங்கப்பட்டன.

  ஆனந்தரங்கப்பிள்ளை மாற்றுத் திறனாளிகள் பள்ளி: இதேபோல புதுவை பகுதியில் சிறந்து விளங்கிய கீழ்பரிக்கல்பட்டு அரசு பள்ளிக்கு பேராசிரியர் அம்பாடி நாராயணனின் சுழற்கோப்பையும், பள்ளி இறுதி தேர்வில் சாதனை புரிந்த ஆனந்தரங்கம்பிள்ளை மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பள்ளிக்கு சமூகநலத்துறையின் கேடயமும், ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது.

  சிறுவர் சாலை போக்குவரத்துப் பணியில் ஈடுபட்ட ஆச்சார்யா பாலசிக்ஷô பள்ளி மாணவிகள் ஜனனிக்கு முதல் பரிசாக ரூ.1000, ஐஸ்வர்யா, ஸ்வாதி ஆகியோருக்கு 2, 3ம் பரிசுகளும் வழங்கப்பட்டது.

  சுசிலாபாய் அரசு பெண்கள் பள்ளி மாணவிக்கு அமிர்தஞான சவுந்திரி, பெத்தி செமினார் பள்ளி மாணவன் அரிகரன், ஆச்சார்யா பள்ளி மாணவன் தர்ஷன் ஜெயின் ஆகியோருக்கு ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டது.

  ஐஆர்பிஎன், மகளிர் மேம்பாட்டுத் துறைக்கு சிறப்பு கேடயம் பரிசு

  குடியரசு தின விழாவில் சிறந்த அணிவகுப்பு, சிறந்த அலங்கார ஊர்திக்காக ஐஆர்பிஎன் காவல்படை, மகளிர் மேம்பாட்டுத் துறை ஆகியவற்றுக்கு சிறப்புக் கேடயங்களை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.

  உப்பளம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற அணிவகுப்பு, அரசு துறை வாகனங்களின் அலங்கார வண்டி, கலைநிகழ்ச்சிகள் நடந்தன. இதில் சிறந்தவற்றை தேர்வு செய்து பரிசுகளை முதல்வர் ரங்கசாமி வழங்கினார். அணிவகுப்பில் காவலர் பிரிவில் இந்திய ரிசர்வ் பட்டாலியனும், காவலர் அல்லாத பிரிவில் ஊர்க்காவல் படையும், என்.சி.சி. பிரிவில் முதுநிலை பிரிவு விமானப்படை மாணவ, மாணவிகளும், பெண்கள் பிரிவில் ராணுவப் பிரிவும், இளநிலை பிரிவில் சாரணர் மாணவிகளும், அரசு பள்ளிகளில் ஜீவானந்தம் அரசு பள்ளி மற்றும் சுப்பிரமணிய பாரதியார் பெண்கள் பள்ளியும், தனியார் பள்ளிகளில் கே.எஸ்.பி. பள்ளி மற்றும் பேட்ரிக் பள்ளி ஆகியவையும் தேர்வு செய்யப்பட்டு, சிறப்புக் கேடயம் வழங்கப்பட்டது.

  அலங்கார வாகனத்தில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைக்கு முதல் பரிசும், காவல் துறைக்கு 2-ம் பரிசும் வழங்கப்பட்டது. கலை நிகழ்ச்சியில் பேட்ரிக் பள்ளி முதலிடத்தையும், சுசிலா பாய் பெண்கள் பள்ளி 2-ம் இடத்தையும் பெற்றன. ஜவகர் பால் பவன் பள்ளிக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.

  லிசே பிரான்சிஸ் பள்ளி முதன்முதலாக பங்கேற்பு

  குடியரசு தின விழாவில் பிரெஞ்சு பள்ளியான லிசே பிரான்சிஸ் பள்ளி மாணவ, மாணவியர் முதன்முறையாக கலந்து கொண்டனர்.

  உப்பளம் இந்திரா காந்தி மைதானத்தில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் குடியரசு, சுதந்திர தின விழாக்களில் பல்வேறு பள்ளி மாணவ, மாணவிகளின் அணிவகுப்புகள், கலைநிகழ்சிகள் நடைபெறும். புதுவையில் உள்ள லிசே பிரான்சிஸ் பள்ளி பிரான்ஸ் அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.

  கடந்த 1826-ல் பிரெஞ்சு ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட பள்ளி ஆகும். இப்பள்ளி மாணவ, மாணவியர் திங்கள்கிழமை நடந்த குடியரசு தின விழா அணிவகுப்பில் முதன்முதலாக கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai