Enable Javscript for better performance
ஆளுநரின் குடியரசு தின உரையில் எந்தத் திட்டமும் இல்லை: திமுக- Dinamani

சுடச்சுட

    

    ஆளுநரின் குடியரசு தின உரையில் எந்தத் திட்டமும் இல்லை: திமுக

    By  புதுச்சேரி,  |   Published on : 28th January 2015 11:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    துணைநிலை ஆளுநரின் குடியரசு தின உரையில் எந்தத் திட்ட அறிவிப்புகளும் இல்லாமல் வெறுமையாக உள்ளது என திமுக தெரிவித்துள்ளது.
     இதுதொடர்பாக மாநில திமுக அமைப்பாளர் எம்ஏஎஸ் சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கை: ஆட்சியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே இருந்தாலும் அதிகாரத்துக்கு வந்தவுடன் சிலர் மக்களுக்கு விரோதமாக செயல்படுகின்றனர். அவ்வாறு செயல்படுபவர்களுக்கு தங்களுக்கும் மேல் அதிகாரத்தில் ஒருவர் இருக்கிறார் என்பதை தெரியப்படுத்தவே துணைநிலை ஆளுநர் பதவி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
     எனவே துணைநிலை ஆளுநர் பதவியில் இருப்பவர்கள் அரசுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் செயல்படாமல் மக்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். ஆனால் புதுச்சேரி துணை நிலை ஆளுனரின் குடியரசு தின உரையை பார்க்கும்போது, முற்றிலும் ஆளும் கட்சிக்கு ஆதரவாளராக மாறிவிட்டாரோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இரு மாதங்களாக அரிசி வழங்கப்படாததை மறைத்து, கடந்த நவம்பர் மாதம் முதல் மீண்டும் அனைத்து ரேஷன் அட்டைகளுக்கு 10 கிலோ ஒற்றை அவியல் அரிசி வழங்கி வருவதாக தெரிவித்துள்ளார். மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்களை தெரிவித்துள்ள ஏகே.சிங்கின் முக்கிய கோரிக்கையான வேலைவாய்ப்பில் 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது பற்றி தெரிவிக்கவில்லை.
     ஏற்கனவே உள்ள தொழிற்பேட்டைகளில் இருந்து வெளியேறும் தொழில் நிறுவனங்களை தக்க வைப்பதற்கான நடவடிக்கைகளைப்பற்றியோ, சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்காக கையகப்படுத்தப்பட்ட இடத்தில் என்ன செய்யப்போகிறோம் என்பதைப்பற்றி குறிப்பிடவில்லை.
     ஆனால் ஆட்சியாளர்களைப்போல் மேலும் 2 புதிய தொழிற்பேட்டைகள் கொண்டுவர உள்ளதாக ஒரு அறிவிப்பை அறிவித்துள்ளார். மத்திய அரசு மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித்திட்டம் செயல்படுத்தப்படும் மாவட்டங்களை குறைத்தபோது புதுச்சேரியையும் நீக்கிவிட்டதாக கூறப்படுகிறது.
     திட்டமே கைவிடப்பட்ட நிலையில் பயனாளிகள் அனைவருக்கும் வங்கிக் கணக்குகள் மூலம் ஊதியம் வழங்குவதில் முன்னோடி மாநிலமாக புதுச்சேரி திகழ்கிறது எனக்குறிப்பிட்டிருப்பதும் தேவையற்றது. கடந்த 2011-ம் ஆண்டு தானே புயலால் புதுச்சேரி தனது பசுமையை இழந்தது. அப்போது அறிவிக்கப்பட்ட 2.5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தில் தற்போதுவரை எவ்வளவு மரக்கன்றுகள் எங்கெங்கு நடப்பட்டுள்ளது என தெரிவிக்கவில்லை.
     ஆனால் 3 ஆண்டுகள் கழிந்த பின்னரும் 2.5 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன என்று தனது உரையில் குறிப்பிட்டிருப்பது வருத்தத்தை அளிக்கிறது. மேலும் புதுச்சேரியில் சட்டம்- ஒழுங்கு அமைதியாகவும், கட்டுப்பாட்டிலும் உள்ளதாக கூறியிருப்பது மிகுந்த வேதனையை அளிக்கிறது.
     எனவே வரும் பட்ஜெட் கூட்டத்தொடரிலாவது துணைநிலை ஆளுநர் அரசால் செய்ய முடிந்தவைகளை மட்டுமே அறிவிக்க வேண்டும் என்றார் சுப்பிரமணியன்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai