Enable Javscript for better performance
சென்டாக் மோசடி, பாலியல் வழக்கு குற்றவாளிகளைப் பிடித்துத் தரத் தயார்: ஐ.ஜி.யிடம் அமைப்புகள் மனு- Dinamani

சுடச்சுட

    

    சென்டாக் மோசடி, பாலியல் வழக்கு குற்றவாளிகளைப் பிடித்துத் தரத் தயார்: ஐ.ஜி.யிடம் அமைப்புகள் மனு

    By  புதுச்சேரி,  |   Published on : 28th January 2015 11:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவையில் போலீஸார் தேடி வரும் சென்டாக் மோசடி மற்றும் சிறுமிகள் பாலியல் வழக்கில் தொடர்புடையவர்களை, பொதுமக்கள் பிடித்துக் கொடுக்க அனுமதிக்க வேண்டும் என்று மனித உரிமைகள் பாதுகாப்புக் கழகக் கூட்டமைப்பினர் ஐ.ஜி.யிடம் வலியுறுத்தினர்.
     புதுவை மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புக் கழக பொதுச் செயலர் முருகானந்தம் தலைமையில், தமிழர் தேசிய இயக்கம் அழகிரி, அகில இந்திய லஞ்ச ஒழிப்பு இயக்கம் பிராங்கிளின் பிரான்சுவா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், செவ்வாய்க்கிழமை புதுவை காவல்துறை தலைமை அலுவலகத்தில், ஐஜி பிரவீர் ரஞ்சனிடம் புகார் மனு கொடுத்தனர்.
     அதில் அவர்கள் கூறியிருப்பது: புதுவையில் கடந்தாண்டு பள்ளிச் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தில் அடையாளம் காணப்பட்ட போலீஸார் உள்ளிட்ட குற்றவாளிகளும், தொடர்புடையதாகக் கூறப்படும் அரசியல் பிரமுகர்களும் கைது செய்யப்படாமல் உள்ளனர்.
     சென்டாக் கல்வி இட ஒதுக்கீட்டில் புதுவை மாணவர்களின் இடங்களைப் பறித்தவர்கள் மற்றும் அதற்கு காரணமானவர்களும் கைது செய்யப்படாமல் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றனர்.
     இதனால் இந்தக் கல்வி ஆண்டிலும் மோசடிகள் தொடரும் என்று பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
     குற்ற விசாரணை முறைச் சட்டப் பிரிவின்படி (பிரிவு 37), நீதிமன்றமோ, அரசு அதிகாரிகளோ குற்றவாளிகளை பிடித்துக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டால், இதனை ஏற்று பிடித்துக் கொடுக்க வேண்டியது மக்களின் கடமையாகும்.
     இதன்படி எங்கள் இயக்கத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், தொடர்புடைய குற்றவாளிகளைப் பிடித்துத் தரவும் தயாராக உள்ளனர். பிற சமூக நல அமைப்புகளும் தயாராக உள்ளன.
     எனவே இவ்விரு வழக்குகளிலும் தொடர்புடையவர்களை பிடித்துக் கொடுக்க அனுமதித்தால் பிடித்துக் கொடுக்கத் தயாராக உள்ளோம் என்று மனுவில் தெரிவித்துள்ளனர்.
     மனுவைப் பெற்ற ஐ.ஜி. பிரவீர் ரஞ்சன், வழக்குத் தொடர்பாக குற்றவாளிகளைப் பிடிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்தார்.
     இதனிடையே சென்டாக் மோசடி மற்றும் பாலியல் வழக்கில் தொடர்புடையவர்களை உடனே கைது செய்ய ஐஜி பிரவீர் ரஞ்சன் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து, சக போலீஸ் குழுவினருடன் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்திய சிபிசிஐடி எஸ்பி வெங்கடசாமி, வழக்கில் தொடர்புடையவர்களை விரைந்து கைது செய்யுமாறு போலீஸாரை முடுக்கிவிட்டுள்ளார்.
     இது குறித்து எஸ்பி வெங்கடசாமியிடம் கேட்டபோது, வழக்கில் தொடர்புடையவர்களை 6 தனிப்படைகள் அமைத்து தேடி வருகிறோம். அவர்கள் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர்.
     வீடுகளில் ஞாயிற்றுக்கிழமை திடீர் சோதனை நடத்தினோம். உறவினர்களிடம் விசாரணை நடத்தினோம். அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai