Enable Javscript for better performance
இன்று முதல் 47 நாள்கள் மீன்பிடித் தடைக்காலம் அமல்- Dinamani

சுடச்சுட

    

    இன்று முதல் 47 நாள்கள் மீன்பிடித் தடைக்காலம் அமல்

    By புதுச்சேரி  |   Published on : 15th April 2016 07:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி மாநிலத்தில் மீன்பிடித் தடைக்காலம் ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை 47 நாள்கள் முதல் அமல்படுத்தப்படுகிறது என மீன்வளத் துறை இயக்குநர் ஆர்.மேரி சின்னராணி தெரிவித்துள்ளார்.

     மீன்களின் இனப்பெருக்க காலத்தையொட்டி வருகிற 15-ஆம் தேதி முதல் கடலில் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்திய கடல்களில் மீன் வளத்தை பெருக்க ஒவ்வொரு ஆண்டும் இனப்பெருக்க காலமான ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரை மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது.

     மீன்பிடிப்பை முறைப்படுத்தி, கடலில் உள்ள மீன் வளத்தை சிறந்த முறையில் மேலாண்மை செய்வதற்கும் ஏதுவாக இத்தடை விதிக்கப்படுகிறது. அதன்படி புதுவை கடற்பகுதிகளில் இந்தாண்டு வருகிற 15-ஆம் தேதி முதல் மே 31 வரை 47 நாள்களுக்கு விசைப்படகுகளில் சென்று மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது.

     தடைக்காலங்களில் கனகசெட்டிக்குளம் மீனவ கிராமம் முதல் மூர்த்திக்குப்பம் கிராமம் வரையிலும், காரைக்கால் பிரதேச கடல் பகுதியில் மண்டபத்தூர் மீனவ கிராமம் முதல் வடக்கு வாஞ்சூர் மீனவ கிராமம் வரையிலும் விசைப் படகுகளைக் கொண்டு மீன்பிடிப்பது முற்றிலும் தடை செய்யப்படுகிறது.

     ஏனாம், மாஹே பிராந்தியங்கள்: மேலும் ஏனாம் பிராந்தியத்தில் ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை 61 நாள்களும், மாஹே பிராந்தியத்தில் ஜூன் 15-ஆம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை 47 நாள்களும் இதேபோல் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது என்றார் மேரி.  தடை காலங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருக்கும். இந்நாள்களில் மீனவர்கள் தங்கள் படகுகள், வலைகளை பழுது பார்க்கும் பணிகளில் ஈடுபடுவார்கள். மீன்பிடித் தடைக்காலத்துக்கான நிவாரணம் மீனவர்கள் அனைவருக்கும், அவர்களது வங்கிக் கணக்கில் அரசே நேரடியாக பின்னர் செலுத்தி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai