Enable Javscript for better performance
சரக்குகளை கையாள்வது தொடர்பாக புதுச்சேரி-சென்னை துறைமுகங்கள்இடையே அடுத்த வாரம் ஒப்பந்தம்- Dinamani

சுடச்சுட

    

    சரக்குகளை கையாள்வது தொடர்பாக புதுச்சேரி-சென்னை துறைமுகங்கள் இடையே அடுத்த வாரம் ஒப்பந்தம்

    By DIN  |   Published on : 08th October 2016 01:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சரக்குகளை கையாள்வது தொடர்பாக சென்னை-புதுச்சேரி துறைமுகங்கள் இடையே அடுத்த வாரம் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
    முதல்வர் நாராயணசாமி இரண்டு நாள் பயணமாக வியாழக்கிழமை தில்லி புறப்பட்டுச் சென்றார். அங்கு, இரவு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.
    பின்னர் புதுச்சேரி காங்கிரஸ் பொறுப்பாளரும், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலருமான முகுல் வாஸ்னிக்கை சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம், புதுச்சேரி காங்கிரஸ் அரசின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.
    மத்திய அமைச்சர்களுடன் சந்திப்பு: இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி, இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரை சந்தித்துப் பேசினார்.
    இது குறித்து முதல்வர் நாராயணசாமி கூறியதாவது: சென்னை துறைமுகத்துக்கு வரும் சரக்குகளில் ஒரு பகுதியை புதுச்சேரியில் இறக்குவதற்கு, சென்னை துறைமுகத்துக்கும், புதுச்சேரி துறைமுகத்துக்கும் இடையே ஒப்பந்தம் போட நடவடிக்கை எடுத்து வருகிறேன். இது குறித்து மத்திய நிதி அமைச்சர்களிடம் ஆலோசனை செய்தோம். இந்த ஒப்பந்தத்தை செய்து கொள்ளும் இடம், தேதி குறித்து இறுதி செய்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
    சென்னை துறைமுகத்துக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவரும், புதுச்சேரி தலைமைச் செயலாளரும் சேர்ந்து அடுத்த வாரத்தில் ஒப்பந்தம் செய்து கொள்வர். இதன் மூலம் புதுச்சேரி துறைமுகத்தில் முதல் ஆண்டு 10 லட்சம் டன் சரக்குகள் இறக்குமதி செய்யப்படும், அடுத்த ஆண்டுகளில் 40 லட்சம் டன் இறக்குமதி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றார் நாராயணசாமி.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai