சுடச்சுட

  

  தமிழ் மொழி வளர்ச்சிக்கு அரசு உறுதுணையாக இருக்கும்: முதல்வர் நாராயணசாமி

  By DIN  |   Published on : 05th September 2016 02:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு அரசு என்றும் உறுதுணையாக இருக்கும் என முதல்வர் வி.நாராயணசாமி தெரிவித்தார்.
   புதுச்சேரி பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் பாவேந்தர் கலை, இலக்கிய திங்கள் விழாவின் தொடக்கவிழா பாரதிதாசன்
   நினைவு அருங்காட்சியத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
   முனைவர் நாக.செங்கமலத்தாயார் வரவேற்றார். பேரவை துணைத் தலைவர் விபி. சிவக்கொழுந்து, கலைமாமணி மன்னர்மன்னன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். க.லட்சுமிநாராயணன்
   எம்.எல்.ஏ., கலை, பண்பாட்டுத்துறை செயலர் பி.ஆர்.பாபு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அறக்கட்டளை நிறுவனர் கோ.பாரதி நோக்கவுரை ஆற்றினார்.
   முதல்வர் நாராயணசாமி தலைமை வகித்து பேசியதாவது:
   புதுவை மாநிலத்தில் தற்போது தான் நாங்கள் ஆட்சிக்கு வந்துள்ளோம். தமிழ் உணர்வுள்ள நாங்கள் கண்டிப்பாக தமிழை வளர்க்க முனைந்து செயல்படுவோம்.
   பாரதிதாசன், பாரதியார், அரவிந்தர், காந்தி, நேரு, சங்கரதாஸ் சுவாமிகள் பிறந்த மாதம் மற்றும் அன்னை புதுவைக்கு வந்த மாதங்களில் அவர்களின் பெயரில் கலை விழா நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
   பாரதிதாசன் அருங்காட்சியகத்தில் உள்ள நூல்களை கணினி மயமாக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதனை அரசு முனைந்து செயல்படுத்தி, புத்தகங்களை பொக்கிஷமாக காக்கும்.
   புதுவை மாநிலத்தை பொறுத்தவரை மத்திய அரசின் உதவி இல்லாமல் மாநிலத்தில் வளர்ச்சி காண முடியாது. நம்முடைய வருமானத்தை வைத்து வளர்ச்சியை கொண்டுவர முடியாது. ஏனென்றால் மக்களுக்குச் செய்ய வேண்டிய சேவைகள், கடமைகள் நிறைய உள்ளன.
   புதுச்சேரி இந்திரா காந்தி மருத்துவமனையில் மருத்துவர்கள், தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு கொடுக்கப்படும் ஊதியம் ரூ.68 கோடி. மீதியுள்ள 7 கோடியில் மருத்துவ உபகரணங்கள் வாங்க வேண்டும்.
   எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமோ அதில் கவனம் செலுத்தாததால் மாநிலம் பின்நோக்கி சென்றுவிட்டது.
   இதை மாற்ற வேண்டும். மருத்துவ உபகரணங்கள், தரமான மருத்துவர்கள் நியமிக்க முக்கியத்துவம் தர வேண்டும். வேலைக்கு ஆள்களை நியமிப்பதற்காக மட்டும் நிறுவனங்களை ஆரம்பிக்கக் கூடாது.
   ஒரு நிறுவனம் ஆரம்பித்தால், அது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும். ஆனால் நஷ்டம் ஏற்படுகின்ற நிறுவனங்களுக்கு மானியம் கொடுத்ததால்தான் மாநில நிதி ஆதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
   அதாவது, புதுச்சேரி அரசு பொது நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் 13,500 பேருக்கு மானியமாக ரூ.656 கோடி கொடுத்துள்ளது.
   இந்த நிதியை புதுவை மாநிலத்தில் மேம்பாலம் கட்டுவதற்கு, தரமான கல்வி, கிராமப்புற மக்களுக்கு தரமான மருத்துவ வசதி அளிக்க பயன்படுத்தி இருந்தால், மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்திருக்கும். ஆள்களை வேலைக்கு வைக்கலாம். தேவையுள்ள அளவு மட்டுமே வைக்க வேண்டும். அதுதான் முக்கியம். அனைவரது ஒத்துழைப்பு இருந்தால் பல திட்டங்களை நிறைவேற்ற முடியும்.
   சில தமிழறிஞர்கள், மொழி வல்லுநர்களுக்கு கலைமாமணி விருது தரவில்லை என்றாலும் கூட, நாங்கள் அவர்களை கண்டறிந்து விருதுகளை வழங்குவோம் என்றார்.
   பின்னர், வரலாற்று ஆய்வாளர் லோகநாதனுக்கு வணிக வரலாற்று மாமணி விருது வழங்கினார். இதைத் தொடர்ந்து, புவிபோற்றும் புரட்சிக் கவிஞர் என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. இதில் கவிஞர்கள், தமிழறிஞர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai