சுடச்சுட

  

  தினக்கூலி ஊழியர்கள் பணிநீக்கத்தால் நோனாங்குப்பம் படகு இல்லத்துக்கு ரூ.40 லட்சம் வருவாய் இழப்பு

  By நமது நிருபர், புதுச்சேரி  |   Published on : 06th September 2016 10:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரியில் சுற்றுலாத் துறைக்கு அதிக வருவாய் ஈட்டித் தரும் நோனாங்குப்பம் படகு இல்லம் தினக்கூலி ஊழியர்கள் பணிநீக்கத்தால் கடந்த 3 வாரங்களாக ரூ.40 லட்சம் வரை வருவாயை இழந்துள்ளது.
  புதுச்சேரி புகழ்பெற்ற ஆன்மிக சுற்றுலாத் தலமாகவும் விளங்கி வருகிறது. வார இறுதி நாள்களில் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்.
  குறிப்பாக, புதுவையில் உள்ள மணக்குள விநாயகர் கோயில், அரவிந்தர் ஆசிரமம், கடற்கரை, பழங்கால தேவாலயங்கள், ஆரோவில் சர்வதேச நகரம் போன்றவற்றை கண்டு செல்கின்றனர்.
  புதுவையிலிருந்து 8 கி.மீ. தொலைவில்  ரம்மியமான இயற்கைச் சூழலில் சுண்ணாம்பாற்றில் நோனாங்குப்பம் படகுத் துறை உள்ளது. இங்கு சுற்றுலாப்பயணிகளைக் கவரும் வகையில் பல்வேறு வகையான படகுகள் உள்ளன.
  சுமார் 3 கி.மீ. தொலைவு ஆற்றிலேயே சென்று பேரடைஸ் பீச் பகுதியில் சில மணிநேரம் செலவிட்ட பிறகு மீண்டும் படகுக் குழாமுக்கு கொண்டு வந்து சுற்றுலாப் பயணிகளை விடுவர்.
  புதுவை நோனாங்குப்பம் சுண்ணாம்பாறு படகுக் குழாமில் 80 பேர் பயணம் செய்யக் கூடிய புதுப்பிக்கப்பட்ட 3 அடுக்கு அதிநவீன சொகுசுப் படகு, 40 பேர் செல்லக்கூடிய 2 பெரிய படகுகள், 20 பேர் பயணம் செய்யக்கூடிய 5 படகுகள், 10 சீட் கொண்ட 10 ஸ்பீடு படகுகள் உள்பட 23 படகுகள் உள்ளன.
  வழக்கமான நாள்களில், படகுத் துறையில் சுற்றுலாப் பயணிகள் வருகையால் ரூ. 50 ஆயிரம் முதல் 75 ஆயிரம் வரை வசூலாகும். விடுமுறை நாள்களில் குறைந்தது ரூ.4 முதல் 5 லட்சம் வரை வசூலாகும்.
  தினக்கூலி ஊழியர்கள் பணிநீக்கம்: புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கீழ் செயல்படும் சுண்ணாம்பாறு, ஊசுட்டேரி, சீகல்ஸ், லே கபே உணவகங்கள் மற்றும் பிடிடிசி அலுவலகத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.200 ஊதியத்தில் பணிபுரிந்து வந்த 214 தினக்கூலி ஊழியர்கள் கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
  இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பலகட்டப் போராட்டங்கள் நடத்தினர். மேலும். நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியும், கோரிக்கை வைத்தும் பலன் ஏற்படவில்லை.
  இதற்கிடையே சுண்ணாம்பாறு படகு இல்லத்தில் தினக்கூலி ஊழியர்கள் நீக்கப்பட்டதால், பேரடைஸ் பீச்சுக்கு படகுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
  இதனால், வார இறுதி நாள்களில் படகு இல்லத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். பேரடைஸ் பீச்சுக்கு செல்லவே பெரும்பாலானோர் விரும்பும் நிலை உள்ளது.
  ஆனால், தினக்கூலி ஊழியர்கள்தான் அங்கு படகு இயக்குதல், பேரடைஸ் பீச்சில் உணவகத்தைப் பராமரித்தல், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். தற்போது அவர்கள் நீக்கப்பட்டு விட்டதால், கடந்த 3 வாரங்களாக படகு இல்லத்தில் எந்தப் பணிகளும் சரிவர நடைபெறவில்லை. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் பாதுகாப்பு இல்லாத காரணத்தால் பேரடைஸ் பீச்சுக்கு செல்ல முடியவில்லை.
  காங்கிரஸ் ஆட்சி கடந்த மே மாதம் ஏற்பட்ட பிறகு தொடர்ச்சியாக பல துறைகளில் தினக்கூலி ஊழியர்கள் நீக்கப்பட்டு வருகின்றனர். முந்தைய ஆட்சியில் நியமிக்கப்பட்ட ஊழியர்கள் தொடர்ந்து நீக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
  இதுகுறித்து அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர் ஏ.பாப்புசாமி கூறியதாவது:
  புகழ்பெற்ற சுற்றுலா தலமான நோனாங்குப்பத்தில் தினக்கூலி ஊழியர்களை நீக்கி விட்டனர். இதில் படகுக் குழாம் ஓட்டுநர், உயிர்காப்பாளர் ஆகியோரும் அடங்குவர், படகு இல்லத்துக்கு வரும் பயணிகளை பேரடைஸ் பீச்சுக்கு அழைத்துச் செல்வதில்லை.
  இதனால், பிடிடிசிக்கு பல லட்ச ரூபாய் வருவாய் இழப்பு உள்ளது. எனவே, தினக்கூலி ஊழியர்களுக்கு மீண்டும் வேலை தர வேண்டும் என்றார் அவர்.
  புதுச்சேரி சுறறுலாத் துறைக்கு தொடர் வருவாய் தரும் ஓரே இடமான நோனாங்குப்பம் படகு இல்லத்துக்கு தேவையான ஊழியர்களை மீண்டும் நியமித்து படகு இல்லச் செயல்பாடுகளை சீராக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai