சுடச்சுட

    

    சுனாமி திட்டத்தில் விடுபட்டவர்களுக்கும் வீடுகள்: முதல்வர் நாராயணசாமி தகவல்

    By புதுச்சேரி,  |   Published on : 07th September 2016 08:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சுனாமியால் பாதிக்கப்பட்டு விடுபட்டவர்களுக்கும் வீடுகள் கட்டப்படும் என முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
     பேரவையில் கேள்வி நேரத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது:
     பாகூர் தனவேலு(காங்.): பாகூரில் உள்ள மீன்குஞ்சு வளர்ப்பு மாதிரி பண்ணை செயலற்ற நிலையில் உள்ளது.
     முதல்வர் நாராயணசாமி: மீன்குஞ்சு வளர்ப்பு மாதிரி பண்ணை தொடர்ந்து உள்ளது. அது பயிற்சி பெறுவோருக்கும் பயனாக உள்ளது. அதில் ஆழ்துளைக் கிணற்றில் பழுது ஏற்பட்டதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது நன்னீர் மீன் வளர்ப்பை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
     ஜெயமூர்த்தி (காங்.): முருங்கப்பாக்கம் அங்களாம்மன் நகரில் கடந்த பல ஆண்டுகளாக வசித்து வரும் 100 குடும்பங்களுக்கு பட்டா பெயர் மாற்றம் தரப்படவில்லை. இதற்கு நிலச் சீர்த்திருத்த சட்டத்தில் விலக்கு தரப்படுமா.
     அமைச்சர் ஷாஜஹான்: நிலச் சீர்திருத்த சட்டத்தில் மேற்கண்ட நிலங்கள் உபரி நிலங்களாக பிரகடனப் படுத்தப்பட்டன. இதுதொடர்பாக கொள்கை முடிவு எடுக்க வேண்டும். சில திருத்தங்கள் செய்து, கல்வீடு கட்டியவர்களுக்கும் பட்டா மாற்றம் செய்து தரப்படும். 6 மாதத்தில் இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும்.
     அமைச்சர் நமச்சிவாயம்: நில ஆர்ஜிதம் செய்வதற்கான சட்டம் இல்லை. மின்வாரியம், அரசு நூலகம், வாடகைக் கட்டடத்தில் இயங்கி வருகின்றன. அரசு இடம் இருந்தால் அங்கு கட்டடம் கட்டித் தரப்படும். முதலில் தடையில்லாச் சான்று பெறுவோம்.
     இரா.சிவா (திமுக): பல கிராமங்களில் சுனாமிக்காக எடுத்த இடங்களை திருப்பித் தந்து விட்டனர். இப்பிரச்னை தொடர்பாக சிபிஐ விசாரணை நடக்கிறது. புறம்போக்கு நிலத்தில் கட்டினால் பட்டா தரவில்லை. சுனாமி திட்டத்துக்கு அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். தவறு நடந்துள்ளது. கடந்த கால நடைமுறையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளனர். 622 வீடுகளுக்கு பணம் தரப்படவில்லை.
     அன்பழகன் (அதிமுக): கடந்த கால காங்கிரஸ் அரசின் ஊழல் தான். முதல்வர் முன்பு மத்திய அமைச்சராக இருந்த போது ஊழல் தொடர்பாக பட்டியலை வழங்கி உள்ளார். சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு கட்ட அரசு நிலம் கையகப்படுத்தியது. பின்னர், அந்த இடங்களை வேறு திட்டத்துக்கு பயன்படுத்தினர். இன்று வரை சின்னவீராம்பட்டினம், வீராம்பட்டினம் கிராமங்களில் வீடுகள் கட்டவில்லை.
     அமைச்சர் கந்தசாமி: காங்கிரஸ் அரசுடன் அதிமுக தான் கூட்டணி வைத்திருந்தது.
     அமைச்சர் ஷாஜஹான்: சில சுனாமி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்படவில்லை. பயனாளிகளுக்கு டோக்கன் தரப்பட்டுள்ளது. மீனவரல்லாதவருக்கும் டோக்கன் தரப்பட்டுள்ளது.
     முதல்வர் நாராயணசாமி: இப்பிரச்னை முக்கியமானதாகும். அப்போதிருந்த காங்கிரஸ் அரசு சுனாமிக்காக பல நடவடிக்கைகளை எடுத்தது. பல மாநில அரசுகள், தன்னார்வ அமைப்புகள் வீடுகள் கட்ட உதவி புரிந்தன. பாதிக்கப்பட்டோருக்கு வீடுகள் ஒதுக்கவில்லை என மீனவர்கள் புகார் கூறினர். பாதிக்கப்படாதவர்களும் வீடுகளை பெற்றதால் புகார் வந்தது. கடலோரத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலக வங்கி உதவியுடன் வீடு கட்ட திட்டம் தீட்டப்பட்டது.
     வீடுகள் கிடைக்காத மீனவர்களுக்கு வீடுகள் கட்ட திட்டமிட்டோம். ஆனால், திட்டம் மேற்கொள்ளப்படவில்லை. தவறான முறையில் நிலம் ஆர்ஜிதம் செய்திருந்தால் அதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும். விடுபட்டவர்களுக்கும் வீடுகள் கட்டப்படும்
     லட்சுமி நாராயணன் (காங்.): உலக வங்கி நிதியுதவி 3 ஆண்டுகள் ஆகியும் வீணாக உள்ளது. இல்லையென்றால் அது திரும்பிவிடும். சுனாமி பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai