சுடச்சுட

  

  திருப்பதி, பெங்களூருக்கு நவம்பரில் விமானப் போக்குவரத்து: அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தகவல்

  By  புதுச்சேரி,  |   Published on : 07th September 2016 12:18 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

   

  புதுச்சேரியில் இருந்து நவம்பர் மாதம் திருப்பதி, பெங்களூருக்கு விமானப் போக்குவரத்து தொடங்கப்படும் என சுற்றுலாத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.
   புதுச்சேரி பட்ஜெட் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பதிலளித்து அவர் பேசியதாவது:
   இந்த பட்ஜெட்டில் என்ன செய்ய முடியுமோ என்பதை முதல்வர் தெரிவித்துள்ளார். ரூ.46 லட்சம் செலவில் அனைத்து வசதிகளுடன் கூடிய அவசரகால ஊர்தி 4 பிராந்தியங்களுக்கு வாங்கப்படும்.
   அதிநவீன வசதிகளுடன் ஆம்புலன்ஸ்: புதுச்சேரியில் மொத்தம் 130 அவசரகால ஊர்திகள் உள்ளன. 96 இயங்குகிறது. 34 இயங்கவில்லை. காரைக்காலில் 3, புதுச்சேரியில் 7 ஊர்திகள் தனியார் வசம் இயக்க சோதனை முறையில் ஒப்படைக்கப்படும்.
   கிராமப் புறங்களில் 40 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. அதில் 20 நிலையங்களில் மாலை 5 முதல் 7 மணி வரை மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படும்.
   தேசிய கிராமப்புற சுகாதார இயக்கம் (என்ஆர்எச்எம்) மூலம் சிறப்பு மருத்துவ நிபுணர்களுக்கு ரூ.1.25 லட்சம் வழங்க மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. ஒப்பந்த மருத்துவர்களுக்கு ரூ.40,000 ஊதியம் தரப்படுகிறது. என்ஆர்எச்எம் மருத்துவர்களுக்கு ரூ.30,000 தான் ஊதியம் கிடைக்கிறது. மத்திய அரசு கூடுதல் தொகை தர ஒப்புக்கொள்ளவில்லை. மாநில அரசே கூடுதல் நிதி ரூ.10,000 வழங்குவோம். சுகாதாரத் துறையில் உள்ள காலிப்பணியிடங்களில் 25 சதவீதம் என்ஆர்எச்எம் ஊழியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
   அரசு பொது மருத்துவமனை, புதுவை, காரைக்கால், ஏனாம், மாஹேயில் 51 கருவிகள் வாங்க ரூ.5.2 கோடி தேவைப்படுகிறது. சென்னை அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் வந்து சிகிச்சை தருகின்றனர். வெளிப்பணி ஒப்படைப்பு முறையில் புதுச்சேரியில் அரசு மருத்துவமனையில் தனியார் மருத்துவ நிபுணர்களை அழைத்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
   காரைக்கால் ஜிப்மருக்கு ரூ.30 கோடி தரப்பட்டுள்ளது. கூடுதல் நிதி ஓஎன்ஜிசி நிதி காரைக்கால் மருத்துவமனைக்கு ரூ.90 கோடியில் சீரமைக்கப்படும். மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்கு குறைந்தது ரூ.20 கோடி தேவைப்படுகிறது.
   புதுவையில் ஓய்வூதியர்கள் 10,000 பேர் உள்ளனர். அரசு காப்பீட்டு நிறுவனங்களிடம் பேசி உள்ளோம். ரூ.150 காப்பீட்டுத் தொகை மாதம் செலுத்தினால், ஆண்டுக்கு புதுச்சேரி மக்களுக்கு ரூ.3.5 லட்சம் வரை சிகிச்சை பெற முடியும்.
   லட்சுமி நாராயணன்: வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்கலாம்.
   அன்பழகன்: எம்ஆர்ஐ ஸ்கேன் கருவி எப்போது வாங்கப்படும். ஒப்பந்த மருத்துவர்கள் ஊதியத்தை அதிகப்படுத்தி வழங்க வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரியில் பட்டமேற்படிப்பு பாடப்பிரிவு தொடங்கப்படுமா? கிராமப்புறங்களில் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பணிபுரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
   முதல்வர்: மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தொடர்பாக அரசு பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கும்.
   அமைச்சர் மல்லாடி: சுற்றுலா தொடர்பாக ரூ.285 கோடிக்கு திட்டங்களை முதல்வர் அறிவித்துள்ளார். ரூ.85 கோடி முதல் தவணைத் தொகை தரப்பட்டுள்ளது. சுற்றுலா துறைச் செயலர், தில்லி சென்றுள்ளார். அங்கு மீதியுள்ள ரூ.200 கோடிக்கு கடற்கரை, கோயில்கள் மேம்பாட்டுக்கு திட்ட அனுமதி பெறப்படும்.
   விமான நிலையத்தை இயக்குவது தொடர்பாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சரை சந்தித்துள்ளோம். நவம்பர் மாதம் புதுவையில் இருந்து திருப்பதி, பெங்களூருக்கு விமானம் இயக்கப்படும்.
   உப்பளம் பயணியர் விடுதி போன்றவை வெளிப்பணி ஒப்படைப்பு முறையில் நடத்தப்படும். ரூ.135 கோடியில் சொகுசுக் கப்பல் திட்டத்தை தொடங்க அனுமதி பெறப்படும். மெகா சுற்றுலா திட்டத்தில் மணப்பட்டு அசோகா ஹோட்டல் திட்டம் செயல்படுத்தப்படும்.
   மீன்பிடித் தடைக்கால நிவாரணம் உயர்த்தப்படும்: தமிழகத்தை போல் இங்கும் தொகையை உயர்த்தி உள்ளோம். 47 நாள்கள் என்றால் ரூ.5 ஆயிரமும், 67 நாள்களாக இருந்தால் ரூ.5500-ல் இருந்து ரூ..6800 தரப்படும்.
   செப்டம்பர் முதல் டிசம்பர் வரை நிவாரணமாக ரூ.2500-ல் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தி தரப்படும். இலவச துணிகளும் அதோடு தரப்படும்.
   மரம், இரும்பு, கண்ணாடி நுண்ணிழையிலான 60 அடி படகு, 45 அடி முதல் 54 அடி படகு, 47 அடி முதல் 59 அடி படகு, 38 அடி நீள படகு, 35 அடி படகு, நாவா படகுகளுக்கு 50 சதவீதம் மானியம் தரப்படும். மீன் விற்போருக்கு ஐஸ்பெட்டிகள் தரப்படும்.
   கொறடா அனந்தராமன்: கிராமங்களில் இருந்து மீன் ஏற்றிக் கொண்டு வர வாகனங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
   அன்பழகன்: படகுத் துறையில் தினக்கூலி ஊழியர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களை மீண்டும் நியமிக்க வேண்டும்.
   என்ஆர்.பாலன்: சுற்றுலாத் துறையில் போதிய அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.
   கீதாஆனந்தன்: நிரவி டிஆர் பட்டினத்தில் மீன்பிடி தளத்தில் முகத்துவாரத்தை தூர்வார வேண்டும்.
   அமைச்சர் மல்லாடி: காரைக்கால் மீன்பிடி துறைமுகம் தொடர்பாக ரூ.34 கோடி திட்டத்தை தில்லிக்கு கொண்டு செல்கிறேன்.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai