Enable Javscript for better performance
விபத்தில் மாணவர் சாவு: நிவாரணம் கோரி மாணவர்கள் மறியல்- Dinamani

சுடச்சுட

    

    விபத்தில் மாணவர் சாவு: நிவாரணம் கோரி மாணவர்கள் மறியல்

    By புதுச்சேரி,  |   Published on : 07th September 2016 08:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பேருந்தில் இருந்து விழுந்து இறந்த மாணவர் குடும்பத்துக்கு நிவாரணம் கோரி, புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை காலை மாணவ, மாணவிகள் மறியலில் ஈடுபட்டனர்.
     இதனால், விழுப்புரம் சாலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
     புதுச்சேரி மூலக்குளம் முத்துப்பிள்ளைபாளையம் புதுநகரைச் சேர்ந்த வாழை இலை வியாபாரி சுப்பிரமணி மகன் முரளி (19). இவர் சேதராப்பட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார்.
     இந்த நிலையில், கடந்த 1-ம் தேதி கல்லூரி முடிந்து தனியார் பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். முத்துப்பிள்ளைபாளையம் அருகே பேருந்து வரும்போது பேருந்தை நிறுத்தச் சொன்னாராம். ஆனால், பேருந்து நிற்கவில்லை. இதனால், ஓடும் பேருந்தில் முன் படியில் இருந்து முரளி இறங்க முயன்றுள்ளார். அப்போது கால் தவறி கீழே விழுந்துள்ளார்.
     இதில் பேருந்தின் பின் சக்கரம் அவர் மீது ஏறியது. இதில், பலத்த காயமடைந்த அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே முரளி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
     இந்த விபத்து குறித்து ரெட்டியார்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
     நிவாரண நிதி கோரி மறியல்
     இந்நிலையில், விபத்தில் இறந்த மாணவர் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவ, மாணவிகள் பிரதான சாலையான இந்திரா காந்தி சிலை அருகே செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.
     இதனால் கடலூர், விழுப்புரம் சாலையில் செல்லும் வாகனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
     மேலும், கல்லூரிகளுக்குச் சென்ற பிற பேருந்துகளில் இருந்தும் மாணவ, மாணவிகளை இறக்கினர். அவர்களும் மறியலில் கலந்து கொண்டனர். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மறியல் நடைபெற்றதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
     ரூ.25 லட்சம் நிதியுதவி
     ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும். குடும்பத்துக்கு அரசு வேலை வழங்க வேண்டும், பேருந்து ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மறியல் போராட்டம் நடைபெற்றது.
     பின்னர், போலீஸார் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.
     ஆளுநரிடம் மனு
     பின்னர் மாணவ, மாணவிகள் துணைநிலை ஆளுநர் மாளிகைக்கு மனு அளிக்க ஊர்வலமாகச் சென்றனர். இதில், இறந்த மாணவரின் பெற்றோர் மற்றும் பாஜகவினரும் கலந்து கொண்டனர்.
     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai