சுடச்சுட

  

  கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் படிப்படியாக அமல்

  By புதுச்சேரி,  |   Published on : 08th September 2016 08:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரியில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.
   சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது:
   கோபிகா (என்ஆர் காங்): வீட்டுக்கடனால் மக்களுக்கு மனஉளைச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் சிலர் தற்கொலைக்கு கூட முயலுகின்றனர்.
   அன்பழகன் (அதிமுக): கூட்டுறவு கடன் சங்கத்தில் வாங்கிய கடனுக்கான வட்டி, அபராத வட்டியை தள்ளுபடி செய்வதாக காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி அளித்தது. பல்வேறு கூட்டுறவு சங்கங்களில் பொதுமக்கள் அசலை விட வட்டியை அதிகம் செலுத்தி வருகின்றனர்.
   அமைச்சர் கந்தசாமி: மானியக்கோரிக்கை விவாதத்தில் இதுதொடர்பாக உரிய பதில் தெரிவிக்கப்படும்.
   பேராசிரியர் ராமச்சந்திரன் (சுயே.): சிபிஎஸ்இ ஆசிரியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் திருத்தப்படுமா?
   அமைச்சர் கந்தசாமி: இப்பிரச்னைக்கு உரிய தீர்வு காணப்படும்.
   இரா.சிவா (திமுக): கட்டாய கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுமா? அரசுப் பள்ளிகளில் முன்மழலையர் பள்ளிகள் செயல்படுகின்றனவா? அரசுப் பள்ளிகளில் 15 மாணவர்களுக்கு 20 ஆசிரியர்கள் உள்ளனர்.
   மாணவர்கள் குறைந்த அளவில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்கள் அதிகம் உள்ளனர். பெருந்தொகை செலவு செய்தும் தரமான கல்வி தரமுடியவில்லை.
   தனியார் பள்ளிகளில் 11-ஆம் வகுப்புக்கு ரூ.1 லட்சம் வரை வாங்குகின்றனர். சட்டத்தை படிப்படியாக எவ்வாறு செயல்படுத்த முடியும்?
   ஏழை, எளியோர் குழந்தைகள் 11ஆம் வகுப்பில் சேர முடியாத நிலை உள்ளது.
   புதுச்சேரியில் பொறியியல் கல்வியில் சேராமல், கலைக்கல்லூரிகளில் சேர காத்துள்ளனர். தனியார் பள்ளிகளுக்கு அதிக சலுகைகள் தருகின்றனர். நகர்ப்புறங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடுமையாகக் குறைந்து விட்டது. ஆரம்பப் பள்ளிகளில் 2-ல் தான் முன்மழலையர் கல்வி உள்ளது. தகுதியான ஆசிரியர்களை நியமித்து ஆங்கிலக் கல்வி கற்பிக்கலாம். அடிப்படையிலேயே கல்வி முறையில் தவறு இழைத்துள்ளனர்.
   அன்பழகன்: கல்வி உரிமைச் சட்டம் இதுவரை ஏன் நடைமுறைப்படுத்தவில்லை? இதில் அரசின் நிலை என்ன? வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள 25 சதவீதக் குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் இலவச கல்வி அளிக்கப்பட வேண்டும். அவ்வாறு, புதுச்சேரியில் எந்த தனியார் பள்ளிகளிலும் இலவச கல்வி தரப்படுவதில்லை.
   அரசுப் பள்ளி மாணவர்கள் உயர்கல்வியில் சேருவதில் சீரான நிலை இல்லை. அரசுப் பள்ளிகளில் தரமான கல்வி இல்லை. புதுச்சேரியில் தனி கல்வி வாரியத்தைக் கொண்டு வர முடியுமா?
   அமைச்சர் ஷாஜஹான்: அரசுப் பள்ளிகளில் முன்மழலையர் கல்வியை வலுப்படுத்த வேண்டும்.
   அமைச்சர் கமலக்கண்ணன்: கல்வி உரிமைச் சட்டத்தின் பல்வேறு அம்சங்கள் புதுவையில் நடைமுறையில் உள்ளன. தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடம் பெற்று ஏழை மாணவர்களை சேர்க்க சட்டப்படி நடவடிக்கை எடுக்கும். ஏன் 4 ஆண்டுகளாக இந்த நடவடிக்கை எடுக்கவில்லை.
   சிவா: மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தான் கல்வி உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணக் கொள்ளையை
   தடுக்க முடியாது என கூறி விடுங்கள்.
   அமைச்சர் கமலக்கண்ணன்: 2014-ல் அமைக்கப்பட்ட கட்டண நிர்ணயக் குழு சார்பில் 30 பள்ளிகளில் இவ்வளவு தான் தொகை வசூலிக்க வேண்டும் என நோட்டீஸ் தரப்பட்டுள்ளது.
   நீதிமன்ற நடவடிக்கையில் எவரும் தலையிட முடியாது. புதுச்சேரியில் மொத்த மாணவர்களில் தனியார் பள்ளிகளில்தான் 1.39 லட்சம் பேர் பயில்கின்றனர். அரசுப் பள்ளிக்கூடத்தை தரமாக நடத்த அனைவருக்கும் பொறுப்பு உள்ளது. கட்டாய கல்வி உரிமைச் சட்டம் படிப்படியாக அமல்படுத்தப்படும்.
   ""தமிழ்நாட்டை ஏன்
   எடுத்துக்காட்டாகக் கொள்கிறீர்கள்''
   சட்டப்பேரவையில் கல்வித்துறை தொடர்பாக தமிழ்நாட்டை உதாரணமாக சுட்டிக்காட்டி உறுப்பினர்கள் சரமாரி கேள்வி எழுப்பின்ர. அதற்கு பதிலளித்து அமைச்சர் கமலக்கண்ணன் பேசியது:
   கல்விமுறையை ஒரே நாளில் மாற்றி விட முடியாது. கல்வித் துறையில் தேசிய அளவில் புதுவை மாநிலம் 4-ஆம் இடத்தில் உள்ளது. 3 கி.மீ. தூரத்துக்கு ஒரு அரசுப் பள்ளி, தகுதியான ஆசிரியர்கள் உள்ளனர். அரசுப் பள்ளிகளில் முன்மழலையர் கல்வி வசதி உள்ளது. தமிழ்நாட்டை ஏன் அனைத்துக்கும் எடுத்துக்காட்டாகக் கொள்கிறீர்கள்? என்றார்.
   ""பட்டா மாறுதல் வழங்கலில்
   உள்ள சிக்கல் களையப்படும்''
   பேரவையில் உறுப்பினர்கள் பேசியது:
   ஜெயமூர்த்தி: அரியாங்குப்பம் தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் எவ்வளவு இலவச பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன? கூட்டுப்பட்டா தரப்பட்டால் வங்கிகளில் கடனுதவி பெறுவதில் சிக்கல் உள்ளது. எல்ஜிஆர் பட்டா பெறுவதிலும் சிக்கல் உள்ளது.
   பிஎன்ஆர்.திருமுருகன்: மூதாதையர்கள் பெயரில் பட்டா உள்ளதால் மாற்றுவதில் சிக்கல் உள்ளது. பட்டா பெயர் மாற்றத்துக்கு காரைக்காலில் அதிகாரம் இல்லை. ஐஏஎஸ் அதிகாரி ஆட்சியராக உள்ளதால் அவருக்கே அதிகாரம் தர வேண்டும்.
   அமைச்சர் ஷாஜஹான்: கூட்டுப்பட்டா தருவதில் பிரச்னை இல்லை. காமராஜர் கல்வீடு கட்டும் திட்டத்தில் 2 வீடுகள் கிடைக்கும் என்பதற்காக பிரித்து தரும்படி கேட்கின்றனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
   கீதா ஆனந்தன்: கிழக்கு பைபாஸ் சாலையில் தெருவிளக்குகள் இல்லாததால் விபத்துகள் அடிக்கடி ஏற்படுகின்றன.
   அமைச்சர் கமலக்கண்ணன்: கொம்யூன் பஞ்சாயத்து எத்தனை தெருவிளக்குகள் வேண்டும் என தொடர்புடைய அமைப்புகள் தீர்மானம் நிறைவேற்றி மின்துறைக்கு வந்தால் உடனே செய்து தரப்படும்.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai