சுடச்சுட

  

  3,500 பேரை பணிநீக்கம் செய்ததே காங்கிரஸ் அரசின் சிறந்த சாதனை: என்.ரங்கசாமி

  By புதுச்சேரி,  |   Published on : 08th September 2016 08:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரியில் 3,500 பேரை பணியில் இருந்து நீக்கியதே, தற்போதைய காங்கிரஸ் அரசின் சிறந்த சாதனை என எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி சாடினார்.
   பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம், புதுச்சேரி சுதேசி மில் அருகே புதன்கிழமை நடந்தது. என்ஆர் காங்கிரஸ் பொதுச்செயலர் பாலன் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி வைத்தார்.
   மாலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு பழச்சாறு வழங்கி உண்ணாவிரதத்தை முடித்து வைத்து, என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும், பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான ரங்கசாமி பேசியது:
   ஒரு அரசானது, வேலை கொடுக்க வேண்டும். தற்போது வந்துள்ள அரசோ, தேர்தல் வாக்குறுதியில் குடும்பத்துக்கு ஒருவருக்கு வேலை என்று கூறியது. ஆனால், 3,500 குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்களின் வேலையை பறித்ததுதான் இந்த அரசின் சாதனை.
   பல ஆண்டுகள் பணியாற்றியவர்களை அரசு நீக்கியுள்ளது. இது எந்த சட்டத்தில் உள்ளது என்று கேட்டால், பதில் கூற மாட்டார்கள்.
   அனைத்து குடும்பத்திலும் ஒருவருக்கு வேலை திட்டத்தை நிறைவேற்றுங்கள். அதனை நிச்சயம் வரவேற்கிறோம். அதற்கு முன்னதாக, பணிநீக்கம் செய்தவர்களுக்கு வேலை கொடுங்கள். புதிய வரவு-செலவு திட்டத்தில் இதுசம்பந்தமாக ஒரு வார்த்தையாவது இருக்கிறதா? அதனாலேயே இந்த பட்ஜெட்டை யாரும் பாராட்டவில்லை.
   மத்திய அரசு உதவி செய்தால் தான் மாநில அரசு வளர்ச்சி பெற முடியும் என தற்போதைய முதல்வர் கூறுகிறார். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது, மத்திய இணை அமைச்சராக இருந்தது யார்? அப்போது தெரியாதா, மத்திய அரசு உதவி செய்தால்தான் மாநில அரசு வளரும் என்று.
   ஒரு அரசு வேலை கொடுத்துள்ளது. இன்னொரு அரசு வந்து, நிறைய வாய்ப்பு இருந்தால் அதிகம் பேருக்கு வேலை கொடுக்கலாம். ஆனால் பழிவாங்கும் நடவடிக்கைக்காக ஊழியர்களை வேலையில் இருந்து எடுக்கக் கூடாது. எனினும், இந்த அரசு அனைவரையும் பணியில் அமர்த்தும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
   முன்னாள் பேரவைத் தலைவர் சபாபதி, முன்னாள் அமைச்சர்கள் ராஜவேலு, தியாகராஜன், பிஆர்.சிவா, முன்னாள் அரசு கொறடா நேரு மற்றும் என்ஆர் காங்கிரஸ் பிரமுகர்கள் எக்ஸ்போர்ட் பிரகாஷ்குமார் லட்சுமிகாந்தன் மற்றும் முன்னாள் சேர்மன்கள், பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai