சுடச்சுட

    

    புதுச்சேரி மாநிலத்தில், வரைவு வாக்காளர் பட்டியல் வருகிற 15ஆம் தேதி வெளியிடப்படும் என தலைமைத் தேர்தல் அதிகாரி வி.கந்தவேலு தெரிவித்துள்ளார்.
    அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
    இந்திய தேர்தல் ஆணையம் 2017ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியை தகுதி பெறும் தேதியாக கொண்டு, புதுச்சேரி சட்டப்பேரவைத் தொகுதிகளின் 2017ஆம் ஆண்டுக்கான புகைப்பட வாக்காளர் பட்டியல் சுருக்குமுறை திருத்தப்பணியை நடத்துமாறு உத்தரவிட்டுள்ளது.
    அதன்படி, செப்டம்பர் 15ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல்கள் வெளியிடப்படுகிறது. செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் அக்டோபர் 14ஆம் தேதி வரை உரிமை கோரிக்கைகள், ஆட்சேபணைகள், வாக்குச்சாவடி மற்றும் வாக்காளர் பதிவு அதிகாரிகள், உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகள் அலுவலகங்களில் தாக்கல் செய்யலாம்.
    செப்டம்பர் 16, 30 ஆகிய தேதிகளில் கிராம சபை, உள்ளாட்சி மன்றம், குடியிருப்போர் நலச்சங்கம் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியல் வாசிக்கப்படும். மேலும் 18, அக்டோபர் 9 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடக்கின்றன. நவம்பர் 16ஆம் தேதி நீக்கல் மற்றும் சேர்த்தலுக்கான விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் காலம் முடிகிறது.
    டிசம்பர் 15ஆம் தேதி நீக்கல், சேர்த்தல் மற்றும் திருத்தங்கள் அடங்கிய துணை வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடக்கிறது. 2017-ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி வாக்காளர் பட்டியல் இறுதியாக வெளியிடப்படுகிறது.
    வாக்காளர் பட்டியலில் இடம் பெற இந்திய பிரஜையாக இருக்க வேண்டும். 1.1.2007-இல் 18 வயது நிறைவடைந்தவராகவும், அந்த பகுதியில் குடியிருப்பவராகவும் இருக்க வேண்டும். வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் அந்த நாட்டின் குடியுரிமை பெறாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் தங்களுடைய பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் செய்வதற்கு விரும்பினால் அதற்குண்டான விண்ணப்பப் படிவங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.
    இந்திய தேர்தல் ஆணையம் பொதுமக்களுக்கு ஏதுவாக இப்படிவங்களில் சிறிது மாற்றம் செய்து எளிமைப்படுத்தி உள்ளது. விண்ணப்பதாரர் விண்ணப்ப படிவத்தை நிரப்புவதற்கு உதவியாக விரிவான வழிமுறைகள் விண்ணப்பப் படிவத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் விண்ணப்பப் படிவத்தை நிரப்புவதற்கு வாக்குச்சாவடி அலுவலர் பொதுமக்களுக்கு படிவங்களை பூர்த்தி செய்வதில் உதவுவர்.
    சமர்ப்பிக்கப்படும் ஒவ்வொரு விண்ணப்பத்துக்கும் தொடர் எண்ணுடன் கூடிய ஒப்புதல் சீட்டு வழங்கப்படும். இந்த எண்ணைக் கொண்டு ட்ற்ற்ல்:ஸ்ரீங்ர்ல்ன்க்ன்ஸ்ரீட்ங்ழ்ழ்ஹ்.ல்ஹ்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணைய தளத்தில் தங்களுடைய விண்ணப்பத்தின் நிலைமையை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai