சுடச்சுட

    

    புதுச்சேரியை விட்டு வெளியேற மாட்டேன்: ஆளுநர் கிரண்பேடி

    By DIN  |   Published on : 11th September 2016 12:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அதிகாரிகள் நூறு சதவீத ஒத்துழைப்பு கொடுப்பதால் புதுச்சேரியை விட்டு வெளியேற மாட்டேன் என்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்தார்.
    புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கிரண்பேடி பொறுப்பேற்று 100 நாள்கள் நிறைவடைந்ததையொட்டி நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசியது: மிகவும் பயனுள்ள வகையில் புதுவை சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்று முடிந்துள்ளது. ஆளுநர் மாளிகையால் மேற்கொள்ளப்படும் பணிகளில் அனைத்து அதிகாரிகளின் பங்களிப்பும் உள்ளது.
    செய்தித்தாள்களில் வரும் நிறை, குறைகள் அனைத்தும் ஆராயப்பட்டு, நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. எங்கள் செயல்பாடுகளை மக்கள் அறிந்தால் அவர்களும் புதுச்சேரியை தூய்மையாக வைத்திருக்க முயற்சி செய்வர்.
    புதுவையில் உள்ள அனைத்து மாணவர்களும் தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்தால் புதுவை தூய்மையாக மாறிவிடும். இது தொடர்பாக கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
    நிர்வாகத் தலைமை : அடுத்த 100 நாள்களில் புதுவையை சிறப்பாக மாற்றியமைக்க பாடுபடுவேன். புதுவையின் அரசியல் தலைமை முதல்வர் என்றால், நிர்வாகத் தலைமை துணைநிலை ஆளுநர். தற்போது அனைத்து அதிகாரிகளும் 100 சதவீத ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். அதனால், புதுவையை விட்டு வெளியேறும் எண்ணம் இல்லை என்றார் அவர். கடந்த சில நாள்களுக்கு முன்பு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய கிரண்பேடி, புதுவையை தூய்மையாக மாற்ற ஒத்துழைப்பு தரவில்லையென்றால் புதுவையை விட்டு வெளியேறுவேன் என்று அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    முதல்வருக்குப் பாராட்டு
    துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, செய்தியாளர்களிடம் மேலும் கூறுகையில், புதுவை முதல்வர் நாராயணசாமியுடன் பணிபுரிவது மகிழ்ச்சியளிக்கிறது. அவர் எதிர்காலத்துக்காக யோசிக்கும் சிறப்பான சிந்தனை உடையவர். பேரவையில் அவர் அறிவித்த தொழிற்கொள்கை மிகவும் சிறப்பு வாய்ந்தது என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai