சுடச்சுட

  

  தமிழக அரசின் சிறப்புத் திட்டமான இயந்திர நெல் நடவுப் பணிகளைத் தடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, மயிலாடுதுறையில் விவசாய சங்கத்தினர் மற்றும் மேமாத்தூர் கிராம விவசாயிகள் சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர்.
  நாகை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், மேமாத்தூர் கிராமத்தில் விவசாயப் பணிகளில், இயந்திரங்கள் பயன்படுத்துவதற்கு அந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளர்கள் மற்றும் (சிபிஐஎம் சார்பு) விவசாய சங்கத்தினர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
  இதனால் விவசாயிகளுக்கும், விவசாய கூலித் தொழிலாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, செம்பனார்கோயில் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர். வருவாய்க் கோட்டாட்சியர் விசாரணையும் நடைபெறுகிறது.
  இந்நிலையில், காவிரி டெல்டா விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் வலிவலம் மு. சேரன் தலைமையில் ஒன்றிணைந்த பல்வேறு விவசாய சங்கங்களைச் சேர்ந்தவர்கள், மேமாத்தூர் கிராம விவசாய சங்க உறுப்பினர்கள், இயந்திர நெல் நடவுப் பணிகளைத் தடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், நாகை மாவட்ட காவல்துறையைக் கண்டித்தும் வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு சனிக்கிழமை உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
  உண்ணாவிரதத்துக்கு விவசாய சங்கங்களின் கூட்டியக்க மாநிலத் தலைவர் பி.கே. தெய்வசிகாமணி, காவிரி டெல்டா பாசனதாரர்கள் முன்னேற்ற சங்கத் தலைவர் குரு.கோபி. கணேசன், வேதாரண்யம் வட்டார விவசாயிகள் நலச் சங்கத் தலைவர் ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உண்ணாவிரதத்தை, தமிழ்நாடு டெல்டா விளைபொருள் உற்பத்தியாளர் நலச் சங்கத் தலைவர் ராஜாராம் தொடங்கி வைத்தார். காலை 10 முதல் பிற்பகல் 3.30 மணி வரை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
  இதில் விவசாய சங்கங்களின் கூட்டியக்க மாநில துணைத் தலைவர் காவிரி தனபாலன், கரும்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் எம்பாவை. யோகநாதன், விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலர் ஏ.பி. கல்யாணம், நாகை மாவட்டத் தலைவர் திருவரசமூர்த்தி, காவிரி டெல்டா விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் உழவன் பாண்டுரெங்கன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai