சுடச்சுட

  

  முதல்வர் போட்டியிட ஏதுவாக பதவி விலகத் தயார்: நெல்லித்தோப்பு எம்எல்ஏ ஜான்குமார்

  By  புதுச்சேரி,  |   Published on : 14th September 2016 09:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நெல்லித்தோப்பு தொகுதியில் முதல்வர் நாராயணசாமி போட்டியிட ஏதுவாக பதவி விலகத் தயாராக இருப்பதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான்குமார் தெரிவித்தார்.
   கடந்த மே மாதம் நடைபெற்ற புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசின் முதல்வராக, தேர்தலில் போட்டியிடாத நாராயணசாமி பதவி ஏற்றார். அவர் பொறுப்பேற்ற 6 மாதங்களுக்குள் தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்வு பெற வேண்டும்.
   இதனிடையே முதல்வரின் நாடாளுமன்றச் செயலரான ஜான்குமார், தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்து விட்டு, நெல்லித்தோப்புத் தொகுதியை முதல்வருக்கு விட்டுத் தருவார் என கட்சி வட்டாரங்களில் கூறப்பட்டு வந்தது. அதனை உறுதி செய்யும் வகையில் முதல்வர் நாராயணசாமியும் நெல்லித்தோப்பு தொகுதியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
   இந்த நிலையில், காங்கிரஸ் அரசு பதவியேற்று 100 நாள்கள் நிறைவேறிய விழாவில் செவ்வாய்க்கிழமை பங்கேற்ற ஜான்குமாரிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, அவர் கூறியது:
   கட்சி மேலிடம் எப்போது கூறுகிறதோ, அப்போது பதவி விலகத் தயாராக உள்ளேன். முதல்வர் நாராயணசாமி, எனக்கு தந்தையைப் போன்றவர். நெல்லித்தோப்பு தொகுதியில் அவர் என்னை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். அவர் அவ்வாறு வெற்றி பெறாவிட்டால், நான் உயிரை விடத் தயார் என்றார்.
   2 நாள்களில் பதவி விலகல்: நெல்லித்தோப்பு தொகுதியில், முதல்வர் நாராயணசாமி போட்டியிட ஏதுவாக, காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான்குமார், தனது பதவியை 2 நாள்களில் ராஜிநாமா செய்ய வாய்ப்புள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இத்தொகுதியில் ஜான்குமார் ஏறக்குறைய 12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
  இடைத் தேர்தல் பணியை தொடங்கியது காங்கிரஸ்!
   நெல்லித்தோப்பு தொகுதியில் ஏறக்குறைய முதல்வர் நாராயணசாமி போட்டியிடுவது உறுதியாகி விட்ட நிலையில், அங்கு இடைத் தேர்தலுக்கான பணிகளை காங்கிரஸ் கட்சி தொடங்கி உள்ளது.
   ஏற்கெனவே அத்தொகுதியில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் தங்கு தடையின்றி கிடைக்கச் செய்ய நிர்வாகம் முடுக்கிவிடப்பட்டுள்ளது. முதியோர், விதவை, மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம், பல்வேறு அரசு சலுகைகள் பயனாளிகள் எளிதில் பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
   நெல்லித்தோப்பு தொகுதி ஏற்கெனவே திமுக கோட்டையாக விளங்கியது. முன்னாள் முதல்வர் ஜானகிராமன் இங்கு 4 முறைக்கு மேல் வெற்றி பெற்றுள்ளார். திமுகவுக்கு என நிரந்தர வாக்கு வங்கி உள்ளது. அதே போல் சிறுபான்மையினத்தவரும் கணிசமாக வசித்து வருகின்றனர். முதல்வர் நாராயணசாமி இத்தொகுதியில் கட்சிப்பணிகளை மேற்கொள்ளவும் வீடு ஒன்று தேர்வு செய்யப்படுகிறது. கட்சி மேலிடம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டதும் இடைத் தேர்தல் பணிகள் தீவிரப்படுத்தப்படும் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
   நியமன எம்.எல்.ஏ. பதவி?: விரைவில் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்ய உள்ள ஜான்குமாருக்கு அதற்கு பதிலாக நியமன எம்.எல்.ஏ. பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai