சுடச்சுட

    

    நாளை முழு கடையடைப்பு: கட்சிகள், அமைப்புகள் ஆதரவு

    By புதுச்சேரி,  |   Published on : 15th September 2016 10:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கர்நாடகத்தில் தமிழர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து புதுச்சேரியிலும் வெள்ளிக்கிழமை (செப்.16) முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது.
     காவிரியில் தண்ணீர் திறந்து விட எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதைக் கண்டித்து தமிழகத்தில் வெள்ளிக்கிழமை வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
     இந்த நிலையில், புதுச்சேரியிலும் பல்வேறு கட்சிகள், தமிழ் அமைப்புகள், வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் வெள்ளிக்கிழமை முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.
     இதன் ஒரு பகுதியாக, புதுச்சேரி கடற்கரை நேரு சிலை அருகில் தமிழ் அமைப்புகள், பல்வேறு கட்சிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் இரா.அழகிரி தலைமை வகித்தார்.
     கூட்டத்தில், கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டிப்பதோடு, அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக செயல்படும் கர்நாடக அரசு மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி, வருகிற வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்புப் போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
     இதற்கு வணிகர்கள், பேருந்து, ஆட்டோ, லாரி, திரையரங்குகள், தொழில் நிறுவனங்கள் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து உரிமையாளர்கள், பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கோ.அ.ஜெகந்நாதன், கோ.சுகுமாரன், கோ.அழகர், பெ.சந்திசேகரன், பாவாடைராயன், புரட்சிவேந்தன், வீரமோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    திமுக, பாஜக ஆதரவு
     காவிரி பிரச்னை தொடர்பாக, புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள முழு கடையடைப்பு போராட்டத்துக்கு திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
     இதுதொடர்பாக வடக்கு மாநில திமுக அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார் வெளியிட்ட அறிக்கை:
     வரும் வெள்ளிக்கிழமை காவிரி நீர் பிரச்னையில் நமது நியாயமான உரிமைகளை நிலைநாட்ட வலியுறுத்தியும், கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளைக் கண்டித்தும் நடைபெற உள்ள முழு கடை அடைப்பு போராட்டத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் திமுகவின் முழு ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
     அதே அடிப்படையில் புதுவையிலும் வருகிற 16-ஆம்தேதி நடைபெறுகிற முழு அடைப்பு போராட்டத்துக்கு எங்களது முழு ஆதரவை வழங்குவோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
     பாஜக: இதுதொடர்பாக புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன் விடுத்துள்ள அறிக்கை:
     தமிழகம் மற்றும் புதுச்சேரி காரைக்கால் விவசாயத்துக்காக, காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட கோரும் உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காமல் வன்முறையை கட்டவிழ்த்து விட்டு தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துவது அவர்களது உடைமைகள் மற்றும் பேருந்துகள் மீது தீயிட்டு எரிப்பது போன்ற வன்முறைச் செயல்கள் நடக்கின்றன.
     அதற்கு ஆதரவாக செயல்படும் கர்நாடக காங்கிரஸ் அரசை கண்டித்து வருகிற செப்டம்பர் 16ஆம் தேதி புதுச்சேரி வணிகர் கூட்டமைப்பு நடத்த திட்டமிட்டுள்ள முழு கடையடைப்பு போராட்டத்துக்கு பாஜக முழு ஆதரவு அளிக்கிறது.
     நீட் மாணவர்கள் நலச்சங்கம்: இதே போல் புதுச்சேரி நீட் மாணவர்கள் நலச்சங்கமும் முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. நிர்வாகிகள் வை.பாலா, நாராயணசாமி, நாகராஜன், வழக்குரைஞர் சுப்பிரமணியம் உள்ளிட்டோர் முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தருவதாக தெரிவித்துள்ளனர்.
    "20 ஆயிரம் கடைகள் மூடப்படும்'
     காவிரி பிரச்னை தொடர்பாக புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள முழு அடைப்பையொட்டி, 20 ஆயிரம் கடைகள் மூடப்படும் என வணிகர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
     புதுச்சேரி வணிகர்கள் கூட்டமைப்பு அவசர செயற்குழுக் கூட்டம், முத்தியால்பேட்டையில் புதன்கிழமை நடைபெற்றது. தலைவர் எம்.சிவசங்கர் தலைமை தாங்கினார். செயலர் எஸ்.பாலு, பொருளர் பி.தங்கமணி முன்னிலை வகித்தனர்.
     காவிரி பிரச்னையில் தமிழகம், புதுவையின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டும். வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கர்நாடக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற வெள்ளிக்கிழமை புதுச்சேரியில் நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தில், காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 20 ஆயிரம் கடைகள் அடைக்கப்படும் என கூட்டத்தில், தீர்மானிக்கப்பட்டுள்ளது.
     இதற்கு வணிகர்கள் முழு ஆதரவு தர வேண்டும் எனவும் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai