சுடச்சுட

  

  நெல்லித்தோப்பில் நாராயணசாமி போட்டி: ஜான்குமார் எம்எல்ஏ ராஜிநாமா

  By புதுச்சேரி,  |   Published on : 16th September 2016 11:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி போட்டியிட ஏதுவாக, நெல்லித்தோப்பு சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஏ.ஜான்குமார் தனது பதவியை ராஜிநாமா செய்தார். இதற்கான கடிதத்தை சட்டப்பேரவைத் தலைவர் வி.வைத்திலிங்கத்திடம் வியாழக்கிழமை வழங்கினார்.
   கடந்த மே மாதம் நடைபெற்ற புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், திமுக 2 தொகுதிகளிலும் வென்றன. மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் முதல்வராக நியமிக்கப்படுவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் நாராயணசாமி முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.
   அவரது தலைமையில் 5 பேர் கொண்ட அமைச்சரவை பதவியேற்றது. முதல்வர் நாராயணசாமி 6 மாதங்களுக்குள் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவாக தேர்வு பெற வேண்டும். அப்போதுதான், தொடர்ந்து முதல்வராக நீடிக்க முடியும்.
   இந்த நிலையில், காங்கிரஸ் வென்ற 15 தொகுதிகளில் நெல்லித்தோப்பு தொகுதியில்தான் அதன் வேட்பாளர் ஜான்குமார் அதிகமாக 12,004 வாக்கு வித்தியாசத்தில் வென்றார். நெல்லித்தோப்பு தொகுதியில் திமுகவுக்கும் ஓரளவு செல்வாக்கு உள்ளது. இதனால், தான் போட்டியிடுவதற்கு மிகவும் பாதுகாப்பான தொகுதி நெல்லித்தோப்பு என முதல்வர் நாராயணசாமி முடிவு செய்தார். ஜான்குமார் எம்எல்ஏவும் முதல்வர் போட்டியிட ஏதுவாக பதவி விலக முன்வந்தார்.
   இதைத் தொடர்ந்து, ஜான்குமார் தனது எம்எல்ஏ பதவியை வியாழக்கிழமை ராஜிநாமா செய்தார். இதற்கான கடிதத்தை பேரவைத் தலைவர் வி.வைத்திலிங்கத்திடம் அளித்தார்.
   அப்போது, அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, கமலக்கண்ணன், பேரவை துணைத் தலைவர் சிவக்கொழுந்து, கொறடா அனந்தராமன், எம்எல்ஏக்கள் தனவேல், ஜெயமூர்த்தி, விஜயவேணி உடனிருந்தனர்.
   விரைவில் தேர்தல் ஆணையம் இத்தொகுதியை காலியாக உள்ளது என அறிவித்து முறைப்படி இடைத்தேர்தல் தேதியை அறிவிக்கும். முக்கிய எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் அதில் போட்டியிடுமா? என கேள்வி எழுந்துள்ளது. அதிமுக தரப்பில் முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் அல்லது அவரது மகன் போட்டியிடக் கூடிய வாய்ப்பு உள்ளது.
   முதல்வர் நாராயணசாமி நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட்டால் திமுக ஆதரவுடன் எளிதில் வெற்றி பெறலாம் எனக் கருதி செயல்பட்டு வருவதாகத் தெரிகிறது.
   இதுகுறித்து, பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் கூறியதாவது:
   நெல்லித்தோப்பு தொகுதி எம்எல்ஏ ஜான்குமார் அளித்த ராஜிநாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டேன். அந்தத் தொகுதி காலியாக உள்ளது என முறைப்படி புதுச்சேரி அரசிதழில் அறிவிப்பு வெளியாகும். அந்த அறிவிப்பு பேரவைச் செயலர் மூலம் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்படும் என்றார் அவர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai