சுடச்சுட

  

  புதுச்சேரிக்கான காவிரி நீர் பங்கு 2 நாள்களில் கிடைக்க வாய்ப்பு: தலைமைச் செயலாளர் தகவல்

  By புதுச்சேரி,  |   Published on : 16th September 2016 11:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரி மாநிலத்துக்கான காவிரி நீர் பங்கு 2 நாள்களில் கிடைக்க வாய்ப்புள்ளது என தலைமைச் செயலாளர் மனோஜ் பரிதா தெரிவித்துள்ளார்.
   தலைமைச் செயலகத்தில் அவர் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
   கடந்த 2007-ம் ஆண்டு காவிரி கண்காணிப்பு குழு அளித்த தீர்ப்பின்படி மொத்தம் உள்ள 740 டிஎம்சி நீரில் புதுவைக்கு 7 டிஎம்சி நீர் விடுவிக்கப்பட வேண்டும்.
   தமிழக அரசு மேட்டூர் அணையில் இருந்து புதுவைக்கு உரிய பங்கை தொடர்ந்து வழங்கி வருகிறது. இதில் எந்தச் சிக்கலும் இல்லை.
   எப்போதும் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும். ஆனால், நிகழாண்டில் போதிய நீர் இல்லாததால் புதுவை மாநிலத்துக்கான பங்கு இதுவரை பெறப்படவில்லை.
   கடந்த வாரம் காவிரி கண்காணிப்பு குழுக் கூட்டத்தில் பங்கேற்றேன். அதன்படி, முதலில் 15,000 கன அடியும், தற்போது 12,000 கன அடி நீரையும் கர்நாடக அரசு திறந்து விட உத்தரவிடப்பட்டுள்ளது.
   இதன்படி, புதுவைக்கு முறையே 330 கன அடி, 270 கன அடி நீர் கிடைக்க வேண்டும். மேட்டூர் அணைக்கு தற்போது நீர் வந்துள்ளது. இரண்டு நாளில் காவிரியில் நீர் விடுவிக்கப்பட்டு புதுவையின் பங்கு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
   மேலும், வரும் 19-ம் தேதி மத்திய நீர்வளத்துறை செயலாளர் தலைமையில் கேரளம், கர்நாடகம், தமிழகம், புதுவை மாநில தலைமைச் செயலாளர்கள் கூட்டம் நடக்கிறது. அதில் தற்போதுள்ள நீர் இருப்பு நிலைமைக்கேற்ப இறுதி உத்தரவு வெளியாகும்.
   புதுவை மாநிலத்தில் டெங்கு, சிக்குன்குன்யா நோய் பாதிப்பை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் 33 பேர் டெங்கு பாதிப்புக்காக சிகிச்சை பெற்றனர். இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
   முழு அடைப்பு போராட்டம்
   முழு அடைப்பு போராட்டத்தில் எந்த அசம்பாவிதமும் நேராமல் தடுக்க உரிய பாதுகாப்பு போடப்படும்.
   மாநில கோரிக்கைகள் தொடர்பாக தில்லியில் மத்திய அரசின் துறைச் செயலாளர்களிடம் தெரிவித்துள்ளோம்.
   தேவையான நிதி, சுற்றுலா வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி தடையின்றி கிடைக்கும்.
   புதுவையில் இருந்து விமானப் போக்குவரத்து சேவை 3 மாதங்களில் தொடங்கப்படும்.
   அதே போல, புதுச்சேரி-சென்னை துறைமுக புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
   புதுவை துறைமுகம் விரைவில் சாட்டிலைட் துறைமுகமாக மாற்றப்படும். காரைக்கால் நகரம் அம்ருத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது என்றார் மனோஜ்பரிதா.
   அரசுச் செயலாளர்கள் கந்தவேல், பிஆர்.பாபு, எஸ்.ஜவஹர், சுகாதாரத் துறை இயக்குநர் கேவி.ராமன், செய்தித் துறை இயக்குநர் உதயகுமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai