முழு அடைப்பு: புதுவை லாரி உரிமையாளர் சங்கம் ஆதரவு
By புதுச்சேரி, | Published on : 16th September 2016 11:29 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை நடைபெறும் முழு அடைப்புப் போராட்டத்துக்கு புதுச்சேரி லாரி உரிமையாளர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, சங்கத் தலைவர் செந்தில்குமார் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
காவிரி நதி நீர் பிரச்னையில் தமிழர்களை தாக்கி, அவர்களது சொத்துகளை சேதப்படுத்திய கன்னட அமைப்பினருக்கு துணைவோன கர்நாடக அரசை கண்டித்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இப்போராட்டத்துக்கு லாரி உரிமையாளர் சங்கம் ஆதரவு தருகிறது.
10 லாரிகள் எரிப்பு: கர்நாடகத்தில் இனவெறியர்கள் பல்வேறு வாகனங்களை தீக்கிரையாக்கியதில் புதுச்சேரியைச் சேர்ந்த 10 லாரிகள் எரிக்கப்பட்டுள்ளன.
லாரி ஓட்டுநர்களும் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். தற்போது அவர்கள் மாண்டியாவில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் ரூ.3 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 7 நாள்களாக பிரச்னை நிலவி வருவதால் கர்நாடக எல்லையில் புதுவையைச் சேர்ந்த 1500 லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கர்நாடகம் வழியாக வட மாநிலங்களுக்கும் லாரிகள் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் ரூ.150 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதைக் கண்டித்து தமிழகம், புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது. இதற்கு புதுச்சேரி லாரி உரிமையாளர்கள் சங்கம் முழு ஆதரவு தருகிறது. மேலும், பாண்டிச்சேரி புக்கிங் அசோசியேஷன், டிரான்ஸ்போர்ட் அசோசியேஷன், மினிலாரி உரிமையாளர்கள் சங்கம், பார்சல் லாரி உரிமையாளர்கள் சங்கம் ஆகியவையும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் புதுச்சேரி, காரைக்காலில் உள்ள லாரி, வேன் உள்ளிட்ட ஒரு லட்சம் வாகனங்கள் இயங்காது என்றார் செந்தில்குமார். சங்க நிர்வாகிகள் செயலாளர் சக்ரவர்த்தி, ஹாஜா மொகைதீன், துணைத் தலைவர்கள் குமார், ரங்கசாமி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.