சுடச்சுட

  

  அடுத்த மாதம் மெகா வேலைவாய்ப்பு முகாம்: அரசுச் செயலர் மணிகண்டன் தகவல்

  By DIN  |   Published on : 17th September 2016 08:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரி அரசு தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் படித்த வேலையில்லாத இளைஞர்கள் பயன்பெறும் வகையில் மெகா வேலைவாய்ப்பு முகாம், அக்டோபர் மாதம் நடத்தப்பட உள்ளது என்று அரசுச் செயலர் டி.மணிகண்டன் தெரிவித்தார்.
  அவர் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: தகவல் தொழில்நுட்பத்தின் பயன்கள், அடித்தட்டு மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன.
  அதன்படி, பொறியியல் பட்டதாரிகள், கலை, அறிவியல் பட்டதாரிகளுக்கு தேவையான திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து வேலைவாய்ப்புக்கு தயார்படுத்தப்பட்டு வருகின்றனர். ஐசிடி அகாதெமி மூலம் மாணவர்களுக்கு ரூ.500 கட்டணத்தில் 180 மணி நேரம் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் தரப்படுகின்றன. இப்பயிற்சி முடித்த 2,110 மாணவர்களில் 1,048 பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.
  மெகா வேலைவாய்ப்பு முகாம்: புதுச்சேரி பிராந்தியத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகள் இணைந்து கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கி உள்ளன. முதன்முறையாக இந்த ஒட்டுமொத்த கூட்டமைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் மெகா வேலைவாய்ப்பு முகாம் அக்டோபர் மாதம் நடைபெறுகிறது.
  இதுதவிர 2 வேலைவாய்ப்பு முகாம்களை தனியாக நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதில் பங்கேற்க முன்னணி நிறுவனங்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளன. டிசம்பர் மாதத்துக்குள் இந்த வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெறும். பொறியியல், கலை, அறிவியல், பாலிடெக்னிக் மாணவ, மாணவியரும் இதில் பங்கேற்கலாம்.
  80 பொது சேவை மையங்கள்: பொதுமக்களுக்கான 73 சேவைகள், ஆன்லைன் மூலமே கிடைக்கச் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.
  தற்போது 50 பொது சேவை மையங்கள் உள்ளன. மேலும் கூடுதலாக 80 பொது சேவை மையங்களை அமைக்க உள்ளோம்.
  கிராமப்புற மக்களும் பயன்பெறும் வகையில் 98 கிராம ஊராட்சிகளிலும் பொது சேவை மையங்கள் அமைக்கப்படும். முதல் கட்டமாக பல்வேறு சான்றிதழ்கள் பெறுதல், அடிப்படை கணினி பயிற்சி உள்ளிட்டவை நடைபெறும். இந்த சேவைகளை மக்கள் அடைந்தால், அரசு அதிகாரிகளை எதற்காகவும் காண வேண்டிய தேவை ஏற்படாது.
  புதிதாக 10 டிஜிட்டல் கிராமங்கள்: ஏற்கெனவே புதுச்சேரியில் முதன்முதலாக அபிஷேகப்பாக்கத்தில் டிஜிட்டல் கிராம திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன் கீழ் பொதுசேவை மையம் மூலம் அரசு சேவைகளை மக்களுக்கு வழங்குவது மற்றும் அடிப்படை கணினி அறிவை ஏற்படுத்துவதாகும். வைஃபை வசதியும் குறைந்த கட்டணத்தில் ஏற்படுத்தப்பட்டது.
  கடந்த ஒரு மாதமாக கிராமத்தில் திட்டத்தின் நிலைமை, அதனால் மக்களிடம் கிடைத்த கருத்துகள் அடிப்படையில் அபிஷேகப்பாக்கம் திட்டம் வெற்றி பெற்றதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
  இதன் பலனாக மேலும் 10 கிராமங்களில் டிஜிட்டல் கிராம திட்டத்தை செயல்படுத்த அனுமதி தந்துள்ளது.
  தேசிய டிஜிட்டல் கல்வியறிவு இயக்கம் (சஈகங) மூலம் நடப்பாண்டு மொத்தம் 30 ஆயிரம் பேருக்கு அடிப்படை கணினி கல்வி அறிவு பயிற்சி தர திட்டமிட்டு இதுவரை 17,929 பேருக்கு பயிற்சி தரப்பட்டுள்ளது. 2 சர்வதேச மென்பொருள் நிறுவனங்கள் மூலம் நவீன கெளெளவ்ட் கம்ப்யூட்டிங் பயிற்சி தரப்பட உள்ளது. மொத்தம் 5000 பொறியியல், கலை, அறிவியல் கல்லூரி மாணவ, மாணவியர் இதன் மூலம் பயிற்சி பெறுவர்.
  அரசு ஊழியர்களுக்கு இ-அலுவலக பயிற்சி: அரசுத் துறைகளில் கோப்புகள் இல்லாத நிலையை உருவாக்க 250 ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இ-அலுவலக பயிற்சி (உ-ஞச்ச்ண்ஸ்ரீங்) பயிற்சி தரப்படும்.
  கர்நாடக அரசுடன் ஒப்பந்தம்: புதுச்சேரி மாநிலத்தில் வசிப்போர் தொடர்பான தகவல் தொகுப்பு ஏற்படுத்த கர்நாடக மாநில மின்னணு ஆளுமை சங்கத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
  ரூ.10 கோடி மதிப்பிலான இத்திட்டத்தால் புதுவை அரசுக்கு பெரும் தொகை சேமிப்பாகும். மாநிலத்தில் வசிக்கும் அனைவரின் விவரங்களும் சேகரிக்கப்பட்டு தகவல் தொகுப்பு உருவாக்கப்படும். இதனால் இரட்டை பயன்முறைகள் உள்ளிட்டவற்றை தவிர்த்து விடலாம் என்றார் மணிகண்டன்.
  தகவல் தொழில்நுட்பத் துறை இயக்குநர் ஏ.எஸ்.சிவக்குமார் உடனிருந்தார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai