சுடச்சுட

    

    முழு அடைப்பால் முடங்கியது இயல்பு வாழ்க்கை: ரயில் மறியல், போராட்டத்தில் ஈடுபட்ட 1000 பேர் கைது

    By DIN  |   Published on : 17th September 2016 08:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்தும், காவிரியில் உரிய தண்ணீரை திறந்துவிடக் கோரியும், புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. கடைகள் முழுமையாக மூடப்பட்டதாலும், வாகனங்கள் ஓடாததாலும் மக்கள் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
    காவிரியில் நீர் திறந்து விட எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டு, அவர்களது வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டதைக் கண்டித்து, புதுவையிலும் செப்.16இல் முழு அடைப்புப் போராட்டம் நடத்த பல்வேறு அமைப்புகள் மற்றும் கட்சிகள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதற்கு திமுக, பாஜக, ஐஜேகே, பாமக, இடதுசாரிகள், வணிகர்கள் கூட்டமைப்பு, லாரி உரிமையாளர்கள் சங்கம், ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் என பல்வேறு அமைப்பினர் ஆதரவு தெரிவித்தனர்.
    அதன்படி, வெள்ளிக்கிழமை புதுச்சேரி முழுவதும் மொத்தம் உள்ள 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டன. நகரின் முக்கிய கடை வீதிகளான நேரு வீதியில் உள்ள பெரிய மார்க்கெட், அண்ணா சாலை, காந்தி வீதி, முதலியார்பேட்டை, லாஸ்பேட்டை, முத்தியால்பேட்டை, நெல்லித்தோப்பு, வில்லியனூர், பாகூர், காலாப்பட்டு உள்ளிட்ட இடங்களில் கடைகள் மூடப்பட்டிருந்தன. பரபரப்பாக காணப்படும் மறைமலையடிகள் சாலை உள்ளிட்ட பெரும்பாலான சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
    வாகனங்கள் ஓடவில்லை: இதே போல புதுச்சேரியில் பேருந்துகள், ஆட்டோக்கள், லாரிகள், சரக்கு வாகனங்கள் எதுவும் இயக்கப்படவில்லை. பிஆர்டிசி பேருந்துகள், தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. தமிழ்நாடு அரசு பேருந்துகள் மட்டும் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன.
    தனியார் பள்ளிகள் விடுமுறை: பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. ஆனால், அரசுப் பள்ளிகள் இயங்கின. வாகனங்கள் இயங்காததால் மாணவ, மாணவியர், வேலைக்கு சென்ற பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்கின.
    திரையரங்குகளில் காலை, மதியம் என 2 படக்காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. சுற்றுலாத் தலங்களிலும் மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.
    மறியல், போராட்டம்-1000 பேர் கைது: முழு அடைப்பையொட்டி பல்வேறு அமைப்பினர், புதுச்சேரி புதிய பேருந்து நிலையம், காமராஜர் சாலை, தலைமை தபால்நிலையம், புஸ்சிவீதி, சாரம் ஆகிய பகுதிகளில் மறியல் மற்றும் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். அப்போது, கர்நாடக முதல்வர் சித்தராமையா உருவபொம்மை எரிக்கப்பட்டது.
    புதிய பேருந்து நிலையம் பகுதியில் பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் சாமிநாதன் தலைமையில் அக்கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர்.
    திமுக ரயில் மறியல்: முழு அடைப்பையொட்டி, தெற்கு மாநில திமுக அமைப்பாளர் ஆர்.சிவா தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் திமுக துணை அமைப்பாளர்கள் அனிபால் கென்னடி, குணாதிலீபன், அமுதாகுமார், பொருளாளர் குமாரவேல் உள்பட ஏராளமானோர் பங்கேற்று திருப்பதி சென்ற ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    புதுச்சேரி, புஸ்ஸி வீதியில் வடக்கு மாநில திமுக அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரி முழுவதும் நடைபெற்ற மறியல், முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 1000-த்துக்கும் மேற்பட்டவர்களை போலீஸார் கைது செய்தனர்.
    பேருந்து மீது கல்வீச்சு-டயர் எரிப்பு: இதனிடையே புதுச்சேரி பல்கலை. மாணவ, மாணவியர் ஏற்றிச் சென்ற பிஆர்டிசி பேருந்து, தட்டாஞ்சாவடி வழுதாவூர் சாலையில் வந்தபோது, கல்வீசி தாக்கப்பட்டது. இதில் பேருந்து கண்ணாடிகள் நொறுங்கின. அரியாங்குப்பம்-கடலூர் சாலையில், முழு அடைப்பையொட்டி மர்ம நபர்கள் சாலையின் நடுவே டயர்களை போட்டு தீவைத்தனர். தீயணைப்புத்துறையினர், போலீஸார் விரைந்து வந்து எரிந்த டயர்களை அகற்றினர். இதில் காவலர் அய்யனார் என்பவர் காயமடைந்தார்.
    முதலியார்பேட்டை 100 அடிரோட்டில் திறக்கப்பட்டு இருந்த சாமில் அலுவலகத்தை மர்மநபர்கள் கல்வீசி தாக்கியதில் ஜன்னல் மற்றும் கதவு கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தது.
     முழு அடைப்பு போராட்டத்தையொட்டி டிஜிபி சுனில்குமார் கெளதம் உத்தரவின்பேரில், 1000-க்கும் மேற்பட்ட போலீஸார் முக்கிய பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai