சுடச்சுட

  

  காவிரி பிரச்னையில் கர்நாடக பேரவைத் தேர்தலை மனதில் கொண்டு மத்திய அரசின் செயல்பாடு: எஸ்.டி.பி.ஐ. கட்சி குற்றச்சாட்டு

  By DIN  |   Published on : 18th September 2016 03:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை மனதில்கொண்டு, காவிரி பிரச்னையில் மத்திய அரசின் செயல்பாடுகள் அமைந்திருப்பதாக எஸ்.டி.பி.ஐ. கட்சி தமிழ்மாநில பொதுச்செயலர் கூறினார்.
  சோஷியல் டெமாக்ரெடிக் பார்டி ஆஃப் இந்தியா (எஸ்.டி.பி.ஐ) கட்சி காரைக்கால் மாவட்ட அமைப்பு சார்பில், மாவட்ட நிர்வாகிகளுக்கான தலைமைத்துவ பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கட்சியின் தமிழ்மாநில பொதுச் செயலாளர் நிஜாமுஹைதீன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
  இரண்டரை லட்சத்திற்கும் மிகுதியாக காரைக்கால் மாவட்டத்தில் வாழும் மக்களுக்கு சிறப்பான மருத்துவ வசதி கிடைக்காமல் தவிக்கும் நிலை உள்ளது. எந்தவொரு மேல் சிகிச்சைக்கும் புதுச்சேரி, தஞ்சாவூருக்கு பரிந்துரைக்கப்படும் அவல நிலை காரைக்கால் மருத்துவமனையில் நீடிக்கிறது. புதுச்சேரி அரசு, இப்பிரச்னையை விரைவாக சீர்செய்யவேண்டும். சிறப்பு மருத்துவர்கள் நியமனத்தை விரைவாக செய்ய முன்வரவேண்டும்.
  காரைக்கால் தனியார் துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியால் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிக்கப்படுகிறது. துறைமுகத்தை சார்ந்து வசிக்கும் மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். துறைமுகத்தின் இறக்குமதி, ஏற்றுமதியில் முறையற்றப் போக்கு உள்ளது. புதுச்சேரி அரசு உடனடியாக தலையிட்டு, இதனை ஒரு வரையறை செய்து மக்களைக் காப்பாற்ற வேண்டும்.
  புதுச்சேரியில், மதுக்கடைகளின் எண்ணிக்கை அதிகரிக்க முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார். இதனால் சட்டம் ஒழுங்கு வெகுவாக சீர்கெடும். மக்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்பதை உணர்ந்து அரசு முடிவுகளை மாற்றவேண்டும்.
  மத்தியில் ஆளும் பாஜக அரசு, நாட்டில் வாழும் சிறுபான்மையினர், தலித் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும். இவர்கள் பாதிக்கப்படுவதற்கு மத்திய அமைச்சர்கள் சிலரின் வெறுப்பூட்டும் பேச்சுகளும் ஒரு காரணமாகிறது. காவிரி பிரச்னையில்கூட கர்நாடகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் சதானந்தகவுடாவின் பேச்சுகளால், அங்குள்ள தமிழர்களுக்கெதிரான போராட்டங்கள் நடந்தது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவோ, காவிரி பிரச்னையில் தீர்வு ஏற்படுத்தவோ மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக, இந்த பிரச்னையில் ஒரு சார்பு கொள்கையுடன் செயல்படுகிறது. கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை மனதில்கொண்டு, பாஜக அரசின் செயல்பாடுகள் உள்ளன. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
  மத்திய அரசு வெளியிட்ட புதிய கல்விக் கொள்கை வரைவை கைவிடவேண்டும் என்றார் அவர். காரைக்கால் மாவட்ட தலைவர் முஹம்மது பிலால், மாவட்ட பொதுச்செயலர் தமீம்கனி, செயலாளர் சுல்தான் ஆகியோர் உடனிருந்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai