சுடச்சுட

  

  குற்றம் செய்தால் தண்டனை கிடைக்கும் என்பது அனைவருக்கும் தெரிய வேண்டும்

  By DIN  |   Published on : 18th September 2016 03:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  குற்றம் செய்தால் கட்டாயம் தண்டனை கிடைக்கும் என்று குற்றவாளிகளுக்கு தெரிய வேண்டும் என்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வலியுறுத்தினார்.
  புதுவையில் உள்ள காவல்துறை புலனாய்வு போலீஸார் மற்றும் அரசு தரப்பு வழக்குரைஞர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தலைமையில் நடைபெற்ற இதில், டிஜிபி சுனில் குமார் கெளதம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
  கூட்டத்தில் கிரண்பேடி பேசியது: புலனாய்வு போலீஸாரும், அரசு தரப்பு வழக்குரைஞர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அவ்வாறு செய்தால்தான் அனைவருக்கும் நீதி கிடைக்கும். சட்டம்-ஒழுங்கு சரியாக இருக்கும்.
  குற்றம் புரிந்தவர் பணக்காரர் அல்லது அதிகார பலத்தில் இருப்பவராக இருந்தாலும் குற்றம் புரிந்தால் தண்டனை கிடைக்கும் என்று தெரிந்திருக்க வேண்டும். அதுபோல, செயல்படவேண்டும். நாட்டில் அவ்வப்போது இயற்றப்படும் புதிய சட்டங்கள், நீதிமன்ற தீர்ப்புகள் குறித்து போலீஸாரும் அரசு தரப்பு வழக்குரைஞர்களும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். மேலும், வழக்குகளில் குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்பியிருந்தால், எதில் தவறு செய்தோம் என்று யோசிக்க வேண்டும்.
  இதுபோன்ற தவறுகள் குறித்து மாதமொருமுறையோ இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையோ புலனாய்வு அதிகாரிகளும் அரசு வழக்குரைஞர்களும் கலந்து பேச வேண்டும். அதேபோல, முதல் தகவல் அறிக்கையில் உண்மையை மட்டும் பதிவு செய்ய வேண்டும்.
  எதிர்காலத்தில் சைபர் குற்றங்கள் போன்ற வேறு விதமான குற்றங்கள் நடக்கும். அவற்றுக்கு தகுந்தாற்போல புலனாய்வு அதிகாரிகள் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். அதனால்,அவர்களை சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற நகரங்களுக்கு அனுப்பி பயிற்சி வழங்கப்படும்.
  அரசு தரப்பு வழக்குரைஞருடன் புலனாய்வு அதிகாரி பேச வேண்டும். அவ்வாறு பேசி அனைத்து விஷயங்களையும் உறுதி செய்த பின்னர் வழக்கை நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai