சுடச்சுட

  

  புதிய தொழில்கொள்கையால் புதிய சகாப்தம் தொடக்கம்: தமிழ் மனிதவள மாநாட்டில் புதுச்சேரி முதல்வர் பேச்சு

  By DIN  |   Published on : 18th September 2016 03:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுவையின் புதிய தொழில்கொள்கையால் புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது என்று முதல்வர் நாராயணசாமி பேசினார்.
  இந்திய பயிற்சி மற்றும் வளர்ச்சிக் கழகம் (ஐஎஸ்டிடி) நடத்தும் 2ஆவது தமிழ் மனித வள மாநாடு புதுச்சேரியில், சனிக்கிழமை தொடங்கியது. தொடக்க நிகழ்ச்சியில் முதல்வர் நாராயணசாமி பங்கேற்றுப் பேசியதாவது:
  நகரத்தை நம்பி கிராமங்கள் இருக்கக் கூடாது. கிராமங்களில் உள்ளோருக்கும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி தர மத்திய, மாநில அரசுகள் கவனம் செலுத்துகின்றன. ஆனால், பணிகள் வேகமாக நடைபெறவில்லை.
  புதுச்சேரியில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் புதிய தொழில் கொள்கையை உருவாக்கியுள்ளோம். லெனோவா நிறுவனம் ஸ்மார்ட் போன் தயாரிக்கும் நிறுவனத்தை அமைக்க முதல் கட்டமாக ரூ.300 கோடி முதலீடு செய்ய உள்ளது. 1,600 பேருக்கு திறன் பயிற்சி அளித்து பணிவாய்ப்பு வழங்குவதாகத் தெரிவித்துள்ளது. அதற்கு முன்பாக அரசே திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்க விரும்புகிறது. ஐஎஸ்டிடி நிறுவனங்கள் இணைந்து இப்பயிற்சியை அளிக்க வேண்டும். புதிய தொழில்கொள்கையால் வைரம் பட்டை தீட்டும் தொழிற்சாலை, மோட்டார் உதிரி பாகங்கள் தொழிற்சாலை, பிளாஸ்டிக் உதிரி பாகத் தொழிற்சாலை, கணினி தொழிற்சாலைகள், புதுச்சேரிக்கு வர வாய்ப்புண்டு. புதுச்சேரியில் தொழிற்சாலைகளுக்கான மின்சாரம் யூனிட் ஒன்றுக்கு தெலங்கானாவை விட ரூ.2.60-ம், ஆந்திரத்தை விட ரூ.2.50-ம், தமிழகத்தை விட ரூ.1.10-ம் குறைவு. புதிய தொழில்கொள்கையால் மீண்டும் புதிய சகாப்தம் உருவாகியுள்ளது. புதுச்சேரியின் சூழல் ஓராண்டில் மாறும் என்றார் முதல்வர்.
  வளமான மனிதவளத்தை உருவாக்குவதே இலக்கு: முன்னதாக, தொழில்துறை அமைச்சர் ஷாஜகான் பேசியதாவது: கல்விமுறையில் மாற்றம் அவசியம். குறிப்பாக, திறன்மேம்பாடு முக்கிய தேவையாகியுள்ளது. உயர்கல்வி பயின்றோருக்கு திறன் சார்ந்த மேம்பாட்டுப் பயிற்சியும் அவசியமாகிறது.
  முதல் கட்டமாக 5 ஆயிரம் மாணவர்களுக்கு திறன் சார்ந்த பயிற்சி தர உள்ளோம். அதை படிப்படியாக ஒரு லட்சம் மாணவர்களாக அதிகரிப்போம். வளமான மனிதவளத்தை உருவாக்குவதே இலக்கு. புதுச்சேரி மக்களின் திறன்களை கண்டறிந்து மேம்படுத்த பயிற்சிகள் அளிக்க ஐஎஸ்டிடி உதவினால், அரசு அனைத்து உதவிகளையும் செய்யும். திறன் மேம்பாட்டுக்காக தேவைப்படும் இடத்துடன் கட்டமைப்புகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதுதொடர்பாக திட்டம் தயாரித்தால் அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யலாம் என்றார்.
  நிகழ்ச்சியில் ஐஎஸ்டிடி தேசியத் தலைவர் ஆர்.கார்த்திகேயன், மாநாட்டுச் செயலர் ஏ.எஸ்.கோவிந்தராஜூலு, ஆலோசகர் டி.வி.சுப்பாராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai