சுடச்சுட

    

    புரட்டாசி முதல் சனிக்கிழமை: பெருமாள் கோயில்களில் சிறப்பு அலங்காரம்

    By DIN  |   Published on : 18th September 2016 03:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி காரைக்கால் ஸ்ரீநித்யகல்யாண பெருமாள் திருப்பதி ஸ்ரீமலையப்ப சுவாமியாகவும், ஸ்ரீகோதண்டராமர் வேணுகோபாலனாகவும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
    வைணவத் திருத்தலங்களில் சிறப்புக்குரிய வரிசையில் காரைக்கால் ஸ்ரீநித்யகல்யாண பெருமாள் கோயில் விளங்குகிறது. இக்கோயிலில் மூலவரான ஸ்ரீ ரங்கநாதர் சயனக் கோலத்தில் உள்ளார். உற்ஸவர் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ நித்யகல்யாணராக காட்சியளிக்கிறார். இக்கோயிலில் புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் உச்ஸவருக்கு சிறப்பு அலங்காரம் செய்வது வழக்கம்.
    நிகழாண்டு புரட்டாசி முதல் நாளான சனிக்கிழமை (17.9.2016) மூலவரான ஸ்ரீரங்கநாதருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. உற்ஸவரான ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீநித்யகல்யாண பெருமாளை திருப்பதி ஸ்ரீ மலையப்ப சுவாமியாக அலங்காரம் செய்து பக்தர்களுக்கு காட்சியளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முன்னதாக காலை திருப்பதி திருமலையில் கோயிலில் நடப்பதுபோன்று, சுப்ரபாத சேவை, திருப்பள்ளியெழுச்சி, நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரங்கள் படிக்கப்பட்டன. காலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் மூலவரையும், உற்ஸவரையும் துளசி மாலை அணிவித்து வழிபட்டனர். சனிக்கிழமை மாலை முதல் சகஸ்ர நாம அர்ச்சனையும் தொடங்கப்பட்டுள்ளது. இதுபோன்று காரைக்கால் கோயில்பத்து ஸ்ரீகோதண்டராமர் கோயிலில் உற்ஸவர், ஸ்ரீவேணுகோபாலர் அலங்காரத்தில் காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் இந்த வழிபாட்டில் பங்கேற்றனர். காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் கோயிலில் பக்தர்கள் அதிகமாக காணப்பட்டதால், போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai