சுடச்சுட

  

  7ஆவது ஊதியக்குழு பரிந்துரைப்படி அடுத்த மாதம் முதல் ஊதியம்: முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

  By DIN  |   Published on : 18th September 2016 03:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, புதுச்சேரியில் உள்ள அரசு ஊழியர்களுக்கு அடுத்த மாதம் முதல் ஊதியம் வழங்கப்படும் என்று புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
  இதுகுறித்து, அவர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியது: கடந்த இரு தினங்களுக்கு முன்பு மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லியை சந்தித்து, புதுச்சேரி நிதிநிலை தொடர்பாக பேசினேன். அப்போது பழைய கடன் தொகை ரூ.2,177 கோடி தள்ளுபடி செய்ய வேண்டும், மத்திய நிதிக்குழுவில் புதுவையைச் சேர்க்க காலதாமதம் ஆகும் என்பதால், ஆண்டுதோறும் திட்டமில்லா செலவினங்களுக்கு நிதி தரவேண்டும் என்று வலியுறுத்தினேன். அப்போது 15 நாள்களுக்குள் கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
  7-ஆவது ஊதியக்குழு பரிந்துரையின்படி அடுத்த மாதம் முதல் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படும். அரசு பொதுத் துறை நிறுவனங்கள், வாரியங்கள், கார்ப்பரேஷன் ஆகியவைகளுக்கு குழு அமைத்து நிதி நிலைமைக்கு ஏற்ப ஊதிய கமிஷனை அமல்படுத்த முடிவு செய்யப்படும்.
  உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் காவிரியில் நீரை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகத்தில் சிலர் வன்முறையை தூண்டி, தமிழர்களுக்கும், அவர்களது உடைமைகளுக்கும் சேதம் ஏற்படுத்துவது கண்டிக்கத்தக்கது. அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்.
  முந்தைய ஆட்சியில் தேர்தல் நேரத்தில் முறைகேடாக பணியில் அமர்த்தப்பட்ட ஆயிரக்கணக்கான இளைஞர்களை, தேர்தல் ஆணையம் நீக்கியது. ஆனால், காங்கிரஸ் நீக்கியது போன்று அரசியல் சாயம் பூசி, அரசு மீது சிலர் பழிசுமத்தி வருகின்றனர். இதுகுறித்து முழுமையாக விசாரணை நடத்தப்படும்.
  முதியோர் உதவித்தொகை பெறுபவர்கள் இறந்துவிட்டால், ஈமச்சடங்குக்காக ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதியுதவியை உடனடியாக வழங்க புதுச்சேரிக்கு ரூ.1.25 லட்சமும், காரைக்காலுக்கு ரூ.50 ஆயிரமும், மாஹே, ஏனாமுக்கு தலா ரூ.10 ஆயிரமும் வைப்புத் தொகையாக ஒதுக்கப்பட்டுள்ளது.
  தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி தலைமைதான் முடிவு செய்யும். வேறு முதல்வரை கூட கட்சி தலைமை அறிவிக்கலாம். தில்லியில் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்கச் செல்லும்போது சோனியாகாந்தியை சந்தித்துப் பேசுவேன் என்றார் நாராயணசாமி.
  பொதுப்பணித் துறை அமைச்சர் நமச்சிவாயம், அரசுக் கொறடா அனந்தராமன் ஆகியோர் உடனிருந்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai