சுடச்சுட

    

    கனகன் ஏரியை வனத் துறையிடம் ஒப்படைக்க உத்தரவு: கிரண்பேடி அதிரடி

    By புதுச்சேரி,  |   Published on : 19th September 2016 09:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

     புதுச்சேரி கனகன் ஏரி பராமரிப்பை வனத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டார்.
     புதுவை துணைநிலை ஆளுநராக கிரண்பேடி பதவியேற்றது முதல், நீர்நிலைகளை பராமரித்து பாதுகாத்தல் தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்தி, நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். ஏற்கெனவே அவர் புதுவையில் உள்ள வேல்ராம்பட்டு ஏரி, ஊசுட்டேரி, திருக்கனூர் ஏரி, பாகூர் ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளை ஆய்வு செய்து சீரமைக்க உத்தரவிட்டார்.
     இந்த நிலையில் கதிர்காமம் அஜிஸ் நகரில் அரசு மருத்துவக் கல்லூரி பின்புறம் உள்ள கனகன் ஏரியை அவர் ஞாயிற்றுக்கிழமை காலை ஆய்வு செய்தார். முக்கிய நீராதாரங்களில் ஒன்றாக இருந்து, தற்போது சுருங்கிக் காணப்படும் இந்த ஏரியில், கழிவுநீர் தேங்கி நிற்பதையும், ஆகாயத் தாமரை பரவிக்கிடப்பதையும், அதனால் கொசு மற்றும் விஷப்பூச்சிகள் பெருக்கம் இருப்பதையும் கண்டு கிரண்பேடி வேதனை அடைந்தார்.
     அவர், ஏரியில் தேங்கியுள்ள கழிவுநீரையும், ஆகாயத்தாமரைச் செடிகளையும் அகற்றி நல்ல நீரை சேமிக்க வழி காண அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
     அதன்பின்னர் அங்கு அருகிலுள்ள புதைச் சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்துக்குச் சென்ற அவர், கட்டி முடித்தும் இது ஏன் செயல்பாட்டுக்கு வரவில்லை என்று கேள்வி எழுப்பினார். அப்போது, மின் இணைப்பு கொடுக்கப்படாததால் செயல்பாட்டுக்கு வரவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். உடனடியாக மின் இணைப்புப்பெற்று செயல்பாட்டுக்கு கொண்டுவர உத்தரவு பிறப்பித்தார்.
     அப்போது வனத் துறை அதிகாரிகள், கனகன் ஏரி பராமரிப்பை தங்களிடம் ஒப்படைக்கக் கோரி பொதுப்பணித் துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக ஆளுநரிடம் தெரிவித்தனர். இதையடுத்து கனகன் ஏரியை வனத் துறையிடம் ஒப்படைக்குமாறு ஆளுநர் உத்தரவு பிறப்பித்தார்.
     உள்ளாட்சித் துறை இயக்குநர் மன்சூர், வனத்துறை அதிகாரி குமார், உழவர்கரை நகராட்சி ஆணையர் ரமேஷ், பொதுப்பணித் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai