Enable Javscript for better performance
வருமான வரிச் சோதனையில் ரூ.1.60 கோடியை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்: ஜான்குமார்- Dinamani

சுடச்சுட

    

    வருமான வரிச் சோதனையில் ரூ.1.60 கோடியை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்: ஜான்குமார்

    By புதுச்சேரி,  |   Published on : 19th September 2016 09:32 AM  |   அ+அ அ-   |    |  

    தனது வீட்டில் நடந்த வருமானவரிச் சோதனையின்போது, ரூ.1.60 கோடி ரொக்கத்தை அதிகாரிகள் கொண்டு சென்றதாக, நெல்லித்தோப்பு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ஜான்குமார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
     கடந்த மே மாதம் நடைபெற்ற புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் ஜான்குமார், காங்கிரஸ் சார்பில் நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட்டு வென்றார். இந்த நிலையில், முதல்வராக பதவியேற்ற நாராயணசாமி, தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்வு பெற ஏதுவாக, தனது பதவியை ஜான்குமார் கடந்த 14-ஆம் தேதி ராஜிநாமா செய்தார்.
     அவர் பெரும் தொகையை வாங்கிக் கொண்டு ராஜிநாமா செய்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
     இந்த நிலையில், சென்னை வருமான வரித் துறை அதிகாரிகள், ஜான்குமார் வீட்டில் சனிக்கிழமை 8 மணி நேரம் தொடர்ந்து சோதனை மேற்கொண்டனர். இதில் பல கோடி ரூபாய் ரொக்கம், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்பட்டது.
     இந்த நிலையில், ஜான்குமார் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
     பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் பரிசாக வழங்குவதற்காக 650 தோசைக் கற்களை வாங்கி வைத்திருந்தேன். ஆனால், என்னை பழிவாங்குவதற்காக எதிர்தரப்பினர் அதுகுறித்து தவறான தகவலை தந்துள்ளனர்.
     நான் 25 ஆண்டுகளாக அரசியல் மட்டுமல்லாது, கேபிள் டிவி, ரியல் எஸ்டேட், நிதி ஆலோசனை உள்பட பல்வேறு தொழில்களை செய்கிறேன். தற்போது ரூ.45 லட்சம் வரை வரி செலுத்துகிறேன்.
     வருமான வரித் துறை அதிகாரிகள், எனது வீட்டில் விதிகளின்படி சோதனை நடத்தவில்லை. எனினும், அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்தேன். பணம், நகைகள், சொத்துகள், நிலங்கள் தொடர்பான ஆவணங்களை அளித்தேன்.
     பணம் ஏதும் உள்ளதா? என அவர்கள் கேட்டதற்கு, சில நாள்களுக்கு முன்பு நிலம் விற்றதில் கிடைத்த ரூ.1.60 கோடியை அவர்களிடம் அளித்தேன். அதை அவர்கள் பறிமுதல் செய்யவில்லை. உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தைப் பெற்றுச் செல்லுமாறு கூறி எடுத்துச் சென்றனர்.
     நான் 10 நாள்கள் ஜப்பான், ஹாங்காங் நாடுகளுக்கு செல்கிறேன். எனினும், அந்தத் தொகைக்கான ஆவணங்களை தணிக்கையாளர் மூலம் தயார் செய்து விட்டேன். வருகிற 28ஆம் தேதிக்கு மேல் ஆவணங்களை சமர்ப்பித்து பணத்தைப் பெறுவேன்.
     முதல்வர் நாராயணசாமியிடம் எதையும் எதிர்பார்த்து பதவியை ராஜிநாமா செய்யவில்லை. அவரது வெற்றிக்கு முழுமையாகப் பாடுபடுவேன் என்றார் அவர்.
     
     

    kattana sevai