சுடச்சுட

  

  அரசுத் துறைகளில் மின்னணு ஆட்சி முறை சேவைக்கு புதிய திட்டம்

  By நமதுநிருபர், புதுச்சேரி  |   Published on : 20th September 2016 09:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து அரசு துறைகளிலும் மின்னணு ஆட்சிமுறை சேவையை நடைமுறைப்படுத்த தகவல் தொழில்நுட்பத் துறை மெய்நிகர் தொழில்நுட்ப ஊழியர்கள் (விர்ச்சுவல் ஐ.டி., டெக்னாலஜி கேடர்) எனும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
   தற்போது அரசு, தனியார் என அனைத்துத் துறைகளிலும் தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் பல்வேறு சேவைகள் கிடைக்கின்றன.
   அதேபோல புதுச்சேரியில் அனைத்து அரசுத் துறைகளிலும் மின்னணு சேவையை துரிதப்படுத்த, தகவல் தொழில்நுட்பத் துறை, மெய்நிகர் தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் எனும் புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இதற்காக முதல்கட்டமாக, அரசுத் துறைகளில் சார்புச் செயலர்கள், கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள், எல்சிடி, யுடிசி என பல நிலைகளில் பணிபுரியும், பிஇ, எம்இ, பிடெக், எம்சிஏ போன்ற உயர்கல்வி தகுதி படைத்த ஊழியர்களில், குறைந்தது 200 பேர் தேர்வு செய்யப்படுவர்.
   இவர்கள், "விர்ச்சுவல் ஐ.டி., டெக்னாலஜி கேடர்' எனப்படும் மெய்நிகர் தொழில்நுட்ப ஊழியர்களாகச் செயல்படுவர்.
   இவர்களுக்கு மின்னணு ஆட்சிமுறை திட்டங்களை செயல்படுத்தத் தேவையான பயிற்சி அளிக்கப்படும். இதற்காக அவர்களுக்கு கூடுதலாக 10 சதவீத ஊக்கத்தொகையும் தரப்பட உள்ளது. பயிற்சி பெற்ற இவர்கள், அவர்கள் பணிபுரியும் துறையிலோ அல்லது மின்னணு ஆட்சிமுறை செயல்படுத்தப்படும் துறைகளிலோ பணி அமர்த்தப்படுவர். பல்வேறு துறைகளில் சிக்கனத்தைக் கடைப்பிடிக்கும் வகையில், அவுட்சோர்ஸிங் முறையில் தனியாருக்கு வாய்ப்புகள் தரப்படுகின்றன. இதனால் ஏற்படும் செலவினத்தையும், நேர விரயத்தையும் மேலும் குறைக்கும் பொருட்டு, இந்த மெய்நிகர் தொழில்நுட்ப ஊழியர்கள் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் மூலம் அரசு நிர்வாகத்தில் காகித பயன்பாடு இல்லாமல், ஏராளமான சேவைகள் பொது மக்களுக்கு விரைவாக கிடைக்கும்.
   "விர்ச்சுவல் கேடர்' என்ற திட்டம் கேரளம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில், ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து புதுச்சேரி தகவல்தொழில்நுட்பத் துறைச் செயலர் டி.மணிகண்டன் கூறியது: இத்திட்டத்துக்காக ஏற்கெனவே பல்வேறு துறைகளில் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலனையில் உள்ளன. ஆன்லைன் மூலம் தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தப்பட்டு இவர்கள் தேர்வு செய்யப்படுவர். பின்னர் மின்னணு ஆட்சிமுறை குறித்த பயிற்சி அளிக்கப்பட்டு, துறைகளில் நியமிக்கப்படுவர்.
   அந்தந்த துறையின் அனைத்து மின்னணு ஆட்சிமுறை தொடர்பான பணிகளில் இவர்கள் ஈடுபடுத்தப்படுவர்.
   இணையதளத்தில் செம்மையாக பதிவேற்றம் செய்வது உறுதி செய்யப்படும். இ-டெண்டர், இ-மெயில் அனுப்புதல், குறுஞ்செய்தி, மின்-அலுவலகம் சார்ந்த சேவைகள் மேற்கொள்ளப்படும். இத்திட்டம் மூலம் அரசின் நிதிச்செலவினம் குறையும் என்றார் மணிகண்டன்.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai