சுடச்சுட

    

    ஆட்டோக்கள் இன்று திட்டமிட்டபடி வேலைநிறுத்தம்: முதல்வருடனான பேச்சு தோல்வி

    By புதுச்சேரி,  |   Published on : 21st September 2016 09:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோரிக்கைகள் தொடர்பாக, புதுவை முதல்வருடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், ஆட்டோக்கள் வேலைநிறுத்தம் திட்டமிட்டபடி புதன்கிழமை நடக்கும் என்று அனைத்து ஆட்டோ சங்கங்களின் கூட்டுப் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சேதுசெல்வம் தெரிவித்தார்.
     புதுவையில், இரு சக்கர வாகனங்களை வாடகைக்கு விடும் நிலையங்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது, ஆட்டோ கட்டணத்தை குறைந்தபட்சம் ரூ.40 ஆகவும், ஒரு கி.மீ.க்கு ரூ. 20 எனவும் நிர்ணயிக்க வேண்டும், ஜிபிஆர்எஸ் மீட்டர்களை இலவசமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுநர்கள் செப்.21ஆம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக, புதுச்சேரி மாநில அனைத்து ஆட்டோ சங்கங்களின் கூட்டுப் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சேதுசெல்வம் தெரிவித்திருந்தார். இந்த வேலைநிறுத்தத்தில் காங்கிரஸ், திமுக, அதிமுக கட்சிகளைச் சேர்ந்த ஆட்டோ சங்கங்கள் கலந்து கொள்வதில்லை என ஏற்கெனவே அறிவித்து விட்டன.
     இந்த நிலையில் போராட்டக்குழு உறுப்பினர்களை அழைத்து செவ்வாய்க்கிழமை மாலை முதல்வர் நாராயணசாமி பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதுகுறித்து பேச்சுவார்த்தையில் பங்கேற்ற சேதுசெல்வம் கூறியது:
     பேச்சுவார்த்தையின்போது கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக எந்த உறுதியும் அளிக்கப்படவில்லை. சட்டப்பேரவை உறுப்பினர்கள், அமைச்சருடன் பேசிதான் முடிவு எடுக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்து விட்டார். இதனால், திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் நடக்கும். சில சங்கங்கள் போராட்டத்தில் கலந்து கொள்வதில்லை என்று அறிவித்துள்ளன. ஆனாலும் அந்த சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்களும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்பர் என்றார்.
     போராட்டத்தை கைவிட முதல்வர் வேண்டுகோள்
     புதுச்சேரியில் புதன்கிழமை நடைபெறவுள்ள ஆட்டோ ஓட்டுநர் வேலைநிறுத்தத்தை கைவிட வேண்டும் என முதல்வர் வி.நாராயணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
     இதுதொடர்பாக முதல்வரின் தனிச் செயலர் சி.ராஜமாணிக்கம் விடுத்து தெரிவித்துள்ளதாவது: அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு, நலவாரியம் அமைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களின் நியாயமான கோரிக்கைகளை முதல்வரும், அமைச்சர்களும் பல்வேறு துறை அதிகாரிகளோடு கலந்து பேசி பரிசீலித்து நடவடிக்கை எடுத்து வருவதால் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி புதன்கிழமை ஆட்டோ ஓட்டுநர்கள் நடத்த இருக்கும் வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai