சுடச்சுட

  

  நலிந்த நிலையில் பாண்டெக்ஸ்! நெசவாளர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறி

  By நமது நிருபர், புதுச்சேரி  |   Published on : 21st September 2016 09:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரி அரசின் பாண்டெக்ஸ் நிறுவனம் நலிந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால், நெசவாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
   புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலை வழங்கி அவர்கள் வாழ்வு வளம் பெறவும், நெசவுத் தொழில் மேம்படவும் கடந்த 1957-ஆம் ஆண்டு புதுச்சேரி மாநில நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம் (பாண்டெக்ஸ்) தொடங்கப்பட்டது.
   இதன் கீழ் இணைக்கப்பட்டுள்ள 13 நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்படும் துணிகள் அனைத்தும் பாண்டெக்ஸ் மூலம் அரசின் பல்வேறு திட்டங்கள் மூலம் குறிப்பாக சமூக நலத் துறை, ஆதிதிராவிடர் நலத் துறை மூலம் விநியோகம் செய்யப்படுகின்றன.
   ஆனால், நிர்வாகக் கோளாறுகளால் பாண்டெக்ஸ் நிறுவனம் பல கோடி இழப்பை சந்தித்து வருகிறது. நிர்வாகத்தின் தவறான செயல்பாடுகளால் நிறுவனத்தின் செயல்பாடுகள் சீரழிவை சந்தித்துள்ளன.
   புதுச்சேரி மாநிலத்தில் விவசாயத்துக்கு அடுத்து அதிக வேலைவாய்ப்பைத் தருவதாக நெசவுத்தொழில் உள்ளது. ஏறக்குறைய 10 ஆயிரம் உறுப்பினர்கள் 13 நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் பதிவு செய்துள்ளனர். எனினும் வருமானம் ஈட்ட முடியாததால் ஏராளமான உறுப்பினர்கள் மாற்றுத்தொழில்களை நாடிச் சென்று விட்டனர். தற்போது வெறும் 1000 உறுப்பினர்களே உள்ளனர்.
   டெக்ஸ்புரோ கூட்டுறவு நிறுவனம்: கடந்த 2006-ஆம் ஆண்டு பாண்டெக்ஸ் நிறுவனத்தில் இருந்து டெக்ஸ்புரோ என்ற பெயரில் புதிய கூட்டுறவு நிறுவனம் தொடங்கப்பட்டது. மேலும் வெளிமாநிலங்களில் இருந்து அரசு திட்டங்களுக்கு தேவையான துணிகளை கொள்முதல் செய்ததால், அரசு சார்பு நிறுவனமான பாண்டெக்ஸ் நலிந்த நிலைக்கு தள்ளப்பட்டது. இதில் பணிபுரியும் 75 ஊழிர்களும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
   இதுகுறித்து புதுச்சேரி அரசு ஊழியர் மத்திய கூட்டமைப்பு தலைவர் பி.லட்சுமணசாமி கூறியதாவது:
   பாண்டெக்ஸ் நிறுவனத்தின் இந்நிலைக்கு அதன் பொறுப்புகளில் இருந்தவர்களும், அதிகாரிகளும் தான் காரணம். பாண்டெக்ஸ் நிறுவனம் சீராக இயங்கிக் கொண்டிருந்த போது அதில் தேவைக்கு அதிகமான ஊழியர்களை நியமித்தனர். நிறுவனம் நஷ்டத்தை நோக்கிச் சென்ற போது, கூடுதலாக நியமிக்கப்பட்ட ஊழியர்களை மாற்றவில்லை.
   மேலும் அரசின் இலவச திட்டங்களுக்கு தேவையான துணிகளை வெளிமாநிலங்களில் கொள்முதல் செய்ததும் பாண்டெக்ஸ் நிறுவனத்தின் உற்பத்தியை சரிவுக்கு ஆளாக்கியது.
   குறைந்த உற்பத்தியான நிலையில் கூடுதலாக நியமிக்கப்பட்ட ஊழியர்கள், டெக்ஸ்புரோ நிறுவனத்துக்கு மாற்றப்பட்டனர். ஆனால், அங்கும் அவர்களுக்கு பணி இல்லை.
   டெக்ஸ்புரோ நிறுவனம் தொடர் நஷ்டத்தை சந்தித்து வந்ததால் கடந்த என்.ஆர். காங்கிரஸ் அரசு அதை மூட முடிவு செய்தது. அந்நிறுவனத்தை சீரமைக்கவோ, உற்பத்தியை தொடங்கவோ வாய்ப்பில்லாததால் அப்போதைய அரசு இந்த முடிவை எடுத்தது. பாண்டெக்ஸ் நிறுவனம் மீண்டும் நல்ல நிலையில் இயங்க தற்போதைய அரசு தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும் என்றார் லட்சுமணசாமி.
   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேசச் செயலர் ஆர்.ராஜாங்கம் கூறியதாவது:
   டெக்ஸ்புரோ நிறுவனம் மூடப்பட்ட நிலையில் அங்கிருந்த மீண்டும் பாண்டெக்ஸ் நிறுவனத்துக்கு மாற்றப்பட்ட ஊழியர்களுக்கு ஊதியம் தரப்படவில்லை. இதனால் தங்கள் குடும்பத் தேவைகளுக்கு பணமில்லாமல் ஊழியர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பல கட்ட போராட்டங்கள் நடத்திய பின்னரும் அரசு ஊதியம் தரவில்லை.
   விரைவில் அந்த ஊதிய நிலுவையை வழங்க வேண்டும் என்றார்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai