சுடச்சுட

  

  ஆட்டோ ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம், மறியல்: மாணவர்கள் அவதி

  By புதுச்சேரி,  |   Published on : 22nd September 2016 08:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஆட்டோ கட்டணத்தை குறைந்தபட்சம் ரூ.40 ஆக நிர்ணயம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுவையில் ஆட்டோ ஓட்டுநர்கள் புதன்கிழமை வேலைநிறுத்தம் செய்து, சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், மாணவர்கள், பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகினர்.
   புதுவையில் இரு சக்கர வாகனங்களை வாடகைக்கு விடும் நிலையங்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது. ஆட்டோ கட்டணத்தை குறைந்தபட்சம் ரூ.40 ஆக நிர்ணயித்து, ஒரு கி.மீ.க்கு ரூ.20 என நிர்ணயிக்க வேண்டும். ஜிபிஆர்எஸ் மீட்டர்களை இலவசமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்.21-இல் வேலை நிறுத்தம் செய்வதாக ஆட்டோ ஓட்டுநர்கள் அறிவித்திருந்தனர். இதையடுத்து, அனைத்து ஆட்டோ சங்கங்களின் கூட்டுப் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சேதுசெல்வம் உள்ளிட்டோரை செவ்வாய்க்கிழமை மாலை முதல்வர் நாராயணசாமி அழைத்து நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.
   இதனால், திட்டமிட்டபடி ஆட்டோக்கள் வேலைநிறுத்தம் புதன்கிழமை நடத்தப்பட்டது. சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள், வேலை
   நிறுத்தம் செய்து ஆட்டோக்களை ஏ.எஃப்.டி. மைதானத்தில் காலையில் கொண்டுவந்து நிறுத்தினர்.
   பின்னர் அங்கிருந்து பேரணியாக சட்டப்பேரவை நோக்கி வந்தனர். அப்போது, நேரு வீதி மற்றும் மிஷன் வீதி சந்திப்பில் திடீரென சாலை மறியல் செய்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
   பின்னர், அங்கிருந்து மிஷன் வீதி ஜென்மராக்கினி மாதா கோயில் அருகே வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கலைந்து சென்றனர். மாலை 6 மணி வரை ஆட்டோக்கள் ஓடவில்லை. பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்ல ஆட்டோக்கள் வராததால் அவர்கள் அவதிக்குள்ளாகினர். இதனால் பெற்றோர்கள் இருசக்கர வாகனங்களில் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்றனர்.
   இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாத தொமுச, ஐஎன்டியுசி, அண்ணா தொழிற்சங்கப் பேரவை ஆகிய சங்கங்களின் சில ஆட்டோக்கள் மட்டும் இயங்கின.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai