சுடச்சுட

  

  நிதி முறைகேடு புகார்: காரைக்கால் வேளாண் அறிவியல் நிலைய முன்னாள் முதல்வர் கைது

  By காரைக்கால்,  |   Published on : 24th September 2016 08:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காரைக்கால் வேளாண் அறிவியல் நிலைய முன்னாள் முதல்வர் கோ.விஜயகுமார் நிதி முறைகேடு புகாரில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். அந்நிலைய முன்னாள் தலைவரை போலீஸார் தேடிவருகின்றனர்.
   காரைக்கால் வேளாண் அறிவியல் நிலைய தலைவராக முந்தைய அரசால் நியமிக்கப்பட்டவர் ஆ.சுரேஷ். இவர் மீது நிதி முறைகேடு புகார் கூறப்பட்டது. இவரது பதவி காலம் நிறைவின்போது நிலைய ஒருங்கிணைப்பாளர் கோ.விஜயக்குமார் முதல்வர் பொறுப்பில் இருந்தார்.
   இந்த நிலையில், நிலைய முதல்வராக அண்மையில் பொறுப்பேற்ற செந்தில்குமார், மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில், திருநள்ளாறு காவல் நிலையத்தில், நிதி மோசடி தொடர்பாக வியாழக்கிழமை புகார் அளித்தார். அதில், வேளாண் அறிவியல் நிலைய வாயிலில் காவலருக்கான கட்டடம், காய்கறி விற்பனையகத்துக்கான கட்டடம் கட்ட ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, கடந்த 2015 டிசம்பர் மாதம் ஒப்பந்ததாரர் ராஜேந்திரன் பெயருக்கு ரூ.2 லட்சம் வரைவோலையாக தரப்பட்டுள்ளது. இதை பணமாக்கி, நிலையத் தலைவர் சுரேஷ் வங்கிக் கணக்கில் செலுத்துமாறு விஜயக்குமார் கூறியதன்பேரில் பணம் சுரேஷ் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. ஆனால், கட்டுமானம் நடைபெறவில்லை.
   மேலும், கடந்த ஆண்டு ஆந்திர மாநிலம், கடியம் பகுதியில் மலர் செடிகள் வாங்கிவந்த வகையில் ரூ.1 லட்சம் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்துள்ளது. எனவே, ஆ.சுரேஷ் மற்றும் கோ.விஜயக்குமார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறியிருந்தார். இது தொடர்பாக, வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்ட போலீஸார், வேளாண் அறிவியல் நிலைய முன்னாள் முதல்வர் (பொ) கோ.விஜயக்குமாரை கைது செய்தனர்.
   பின்னர், காரைக்கால் 2-ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிபதி கலைவாணி உத்தரவின் பேரில், கோ. விஜயகுமார் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். தலைமறைவான வேளாண் அறிவியல் நிலைய முன்னாள் தலைவர் ஆ.சுரேஷை போலீஸார் தேடிவருகின்றனர்.
   
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai