சுடச்சுட

  

  புதுச்சேரி வானொலியின் 50-ஆவது ஆண்டு பொன் விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.
   புதுச்சேரி வானொலி, மத்திய அலைவரிசை 1215 கிலோ ஹெர்ட்ஸ், 246.9 மீட்டரில் கடற்கரைச் சாலையில் உள்ள பழைய கலங்கரை விளக்கத்தின் கீழ் தனது ஒலிபரப்பு சேவையை கடந்த 23.9.1967-இல் தொடங்கியது. மேரி என்றழைக்கப்பட்ட பழைய கட்டடத்தில் அப்போதைய மத்திய செய்தி ஒலிபரப்பு அமைச்சர் நந்தினி சத்பதி வானொலி ஒலிபரப்பைத் தொடங்கி வைத்தார்.
   பின்னர் 2.10.89-ல் இந்திரா நகரில் உள்ள புதிய வளாகத்துக்கு புதுச்சேரி வானொலி நிலையம் மாறியது. தற்போது மத்திய அலைவரிசை தினமும் அதிகாலை 5.45 மணிக்குத் தொடங்கி இரவு 11.05 மணி வரையிலும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரை கூடுதல் நேரம் ஒலிபரப்பும் செய்கிறது.
   ரெயின்போ பண்பலை தினமும் அதிகாலை 5 மணிக்குத் தொடங்கி நள்ளிரவு 12 மணி வரை ஒலிபரப்பு ஆகிறது.
   புதுச்சேரி வானொலியின் முதன்மை அலைவரிசை புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள், திருவண்ணாமலை வரையும் என மொத்தம் 76 லட்சம் நேயர்களை சென்றடைகிறது.
   கல்வி, மருத்துவம், மகளிர், குழந்தைகள், மூத்த குடிமக்கள், விவசாயிகள், இளைஞர்கள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பு நேயர்களுக்கும் பல்வேறு பயனுள்ள நிகழ்ச்சிகளை ஒலிபரப்பி வருகிறது.
   பொன்விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கும் புதுச்சேரி வானொலியின் 2 அலைவரிசைகளும் பல மேன்மையான நிகழ்ச்சிகளை வழங்க நேயர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என நிகழ்ச்சிப்பிரிவு தலைவர் பி.பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai