சுடச்சுட

  

  புதுவையில் முதியோர் ஓய்வூதியம் பெறும் மீனவர்களுக்கு கடந்த 4 மாதங்களாக ஓய்வூதியம் வழங்கப்படாததால் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
  புதுவையில் மீன்வளத்துறை சார்பில் மீனவர்களுக்கான முதியோர் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஓய்வூதியத்தை சுமார் 8000 பேர் பெற்று வருகின்றனர். மேலும், புதிதாக 1500 பேர் வரை ஓய்வூதியம் கோரி விண்ணப்பித்துள்ளனர்.
  தற்போது 50 முதல் 59 வயது வரை உள்ளவர்களுக்கு ரூ.1590-ம், 60 முதல் 70 வயது வரை உள்ளவர்களுக்கு ரூ.2100-ம் ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருகிறது. 70 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ.3100 வழங்கப்படுகிறது.
  இந்த நிலையில், இந்த ஓய்வூதியர்களுக்கு கடந்த 4 மாதங்களாக ஓய்வூதியம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
  இதுகுறித்து, மீனவ மக்கள் கழகச் பொதுச் செயலாளர் வீரமணி கூறியது: வம்பாகீரப்பாளையம், குருசுகுப்பம், வைத்திகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 8000-த்துக்கும் மேற்பட்ட முதியவர்கள் மீனவர் முதியோர் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 4 மாதங்களாக ஓய்வூதியம் வழங்கப்படவில்லை.
  ஆனால், சமூக நலத்துறை மூலம் ஓய்வூதியம் பெறுவோருக்கு ஒவ்வொரு மாதமும் 7-ஆம் தேதியே ஓய்வூதியம் வழங்கப்பட்டு விடுகிறது. மீன்வளத் துறை வழங்கும் ஓய்வூதியம்தான் வழங்கப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்கும் போது நிதி இல்லை என்று கூறுகிறார்கள்.
  சமூக நலத்துறை மூலம் வழங்கப்படும் ஓய்வூதியத்தில் ரூ.100 அதிகரிக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு அதிகரிக்கப்படவில்லை.
  மேலும், கடந்த 2 ஆண்டுகளுக்கு ஓய்வூதியம் கோரி விண்ணப்பித்த சுமார் 1500 பேருக்கு இதுவரை ஓய்வூதியம் வழங்கப்படவில்லை என்றார் அவர்.
  இதுகுறித்து, மீன்வளத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியது:
  தற்போது 3 பிரிவுகளாக பிரித்து ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. வயதுவாரியாக வழங்குவதால் நகரப் பகுதிகளில் உள்ளவர்கள் தங்களுடைய வயதை பதிவு செய்துள்ளனர். ஆனால், கிராமப் பகுதிகளில் உள்ளவர்கள் சரியான வயதை பதிவு செய்யவில்லை.
  இதன் காரணமாக ரூ.3100 பெற தகுதியானவர்கள் கூட ரூ.1590 மட்டுமே பெற்று வருகின்றனர். இதனால், ஓய்வூதியம் பெறுவோரின் சரியான வயதை கண்டறியும் பணிகள் நடக்கின்றன. அதனால் தாமதமாகிறது. அதேவேளையில் போதிய நிதியும் இல்லை. தற்போது ரூ.9 கோடி ஓய்வூதியம் வழங்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
  ஆனால், இந்தத் தொகை போதாது. இன்னும் ரூ.2 கோடி தேவை. அதனை அரசிடம் கேட்டுள்ளோம்.
  போதிய நிதி கிடைத்தவுடன் தற்போது வழங்கப்படாமல் உள்ள ஓய்வூதியம் அனைத்தும் ஒன்றாக சேர்த்து வழங்கப்படும்.
  மேலும், புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கப்படும் என்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai