சுடச்சுட

  

  புதுவையை ஜிஎஸ்டி குழுவில் அதிகாரப்பூர்வமாக சேர்க்க ஒப்புதல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
  இது குறித்து அவர், புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியது:
  கடந்த 22, 23 ஆம் தேதிகளில், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில், புதுதில்லியில் நடைபெற்ற ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) குழுக் கூட்டத்தில், சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
  அந்தக் கூட்டத்தில், மாநிலங்கள் பங்கு பெற்றுள்ள ஜிஎஸ்டி அமைப்பில், சட்டப்பேரவை கொண்ட யூனியன் பிரதேசங்களை சேர்க்கும் வகையில், சட்டத்தில் மாற்றம் செய்ய நான் விடுத்த கோரிக்கையை, குழு ஏற்றுக் கொண்டுள்ளது.
  இதன் மூலம் புதுவை, தில்லி யூனியன் பிரதேசங்கள் குழுவில் பங்கேற்க முடியும். வாக்குரிமையும் கிடைக்கும். இதற்கான திருத்தம், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும். இது புதுவைக்கு கிடைத்த அங்கீகாரம். மேலும், ஜிஎஸ்டியால் ஏற்படும் இழப்பீட்டை 5 ஆண்டுகளுக்கு பெறுவது உறுதியாகியுள்ளது.
  ஜிஎஸ்டி அமல்படுத்தும்போது, பட்டியலில் உள்ள மாநிலங்களில் ரூ.10 லட்சத்துக்கும் மேல் வரவு செலவு உள்ள நிறுவனங்கள் வரி செலுத்த வேண்டும். இந்த முடிவால் புதுவை அரசுக்கு ஆண்டுக்கு ரூ.60 கோடி இழப்பீடு ஏற்படும் என்றும் புதுவையில் ரூ.10 லட்சம் என்ற வரையறையை நிர்ணயிக்க வேண்டும் என்றும் கோரினேன். இதனையடுத்து இழப்பு ஏற்படும் தொகையை மத்திய அரசு வழங்கும் என்று கூட்டத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
  சேவை வரி வசூலிக்கும் அளவுக்கு பயிற்சி பெற்ற அதிகாரிகள் புதுவையில் இல்லை. இதனால் ஜிஎஸ்டி சட்டத்தை நடைமுறைபடுத்தும்போது மத்திய அரசு அதிகாரிகள் சேவை வரியை வசூலிப்பர். போதிய பயிற்சி பெற்ற பிறகு புதுவை அரசு அதிகாரிகள் வசூல் செய்வர்.
  மேலும் நிதித் துறை இணையமைச்சர் அர்ஜூன்ராம் மெகவாலை சந்தித்து, மத்திய நிதிக்குழுவில் புதுவை இடம் பெறாததால் திட்டமில்லா செலவினங்களுக்கு ரூ.1000 கோடி வழங்கக் கோரினேன். உடனடியாக அதிகாரிகளை அழைத்து நடவடிக்கை எடுக்குமாறு அவர் உத்தரவிட்டார்.
  பெட்ரோலிய துறை அமைச்சரை சந்தித்து, காரைக்காலில் நவீன மருத்துவமனை கட்ட ரூ. 30 கோடியும், பள்ளி, கல்லூரிகளைச் சீரமைக்க ரூ.30 கோடியும் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மூலம் வழங்கக் கோரியுள்ளேன்.
  தொடர்ந்து சுற்றுச்சூழல் துறை அமைச்சரை சந்தித்து புதுவையின் குடிநீர் தேவைக்காக ஊசுட்டேரியில் இருந்து தண்ணீர் எடுக்க அனுமதி கோரினேன்.
  காவிரி பிரச்னை: காவிரி நீரை தமிழகத்துக்குத் தரமுடியாது என கர்நாடக அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. காரைக்காலுக்கும் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் தேவை. எனவே, உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து, விநாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீரை கர்நாடக அரசு திறந்து விட வேண்டும். இல்லாவிடில், கர்நாடகத்துக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்வது குறித்து தமிழக அரசுடன் பேசி நடவடிக்கை எடுப்போம் என்றார் அவர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai