சுடச்சுட

    

    தமிழக அரசுடன் ஆலோசித்து கர்நாடகம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்படும்: நாராயணசாமி

    By DIN  |   Published on : 25th September 2016 05:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவிரி நீர் பிரச்னையில், கர்நாடகத்துக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வது குறித்து, தமிழக அரசுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சனிக்கிழமை தெரிவித்தார்.
    இதுகுறித்து புதுச்சேரியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
    கடந்த 22, 23-ஆம் தேதிகளில், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில், புதுதில்லியில் நடைபெற்ற ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) குழுக் கூட்டத்தில், சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
    அந்தக் கூட்டத்தில், மாநிலங்கள் பங்கு பெற்றுள்ள ஜிஎஸ்டி அமைப்பில், சட்டப் பேரவை கொண்ட யூனியன் பிரதேசங்களைச் சேர்க்கும் வகையில், சட்டத்தில் மாற்றம் செய்ய நான் விடுத்த கோரிக்கையை, குழு ஏற்றுக் கொண்டுள்ளது.
    இதன் மூலம் புதுவை, தில்லி யூனியன் பிரதேசங்கள் குழுவில் பங்கேற்க முடியும். வாக்குரிமையும் கிடைக்கும். இதற்கான திருத்தம், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும். இது புதுவைக்கு கிடைத்த அங்கீகாரம். மேலும், ஜிஎஸ்டியால் ஏற்படும் இழப்பீட்டை 5 ஆண்டுகளுக்கு பெறுவது உறுதியாகியுள்ளது.
    காவிரி பிரச்னை: காவிரி நீரை தமிழகத்துக்குத் தரமுடியாது என கர்நாடக அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. காரைக்காலுக்கும் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் தேவை.
    எனவே, உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து, விநாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீரை கர்நாடக அரசு திறந்து விட வேண்டும். இல்லாவிடில், கர்நாடகத்துக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்வது குறித்து தமிழக அரசுடன் பேசி நடவடிக்கை எடுப்போம்.
    மேலும், தமிழகம், புதுவையில் வாழும் கன்னடர்களுக்கு இரு அரசுகளும் பாதுகாப்பு அளித்துள்ளது. அதேபோல, கர்நாடகத்தில் வாழும் தமிழர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். இது குறித்து சித்தராமையாவிடம் பேசியுள்ளேன் என்றார் அவர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai