சுடச்சுட

    

    கட்டி முடித்து பல ஆண்டுகளாகியும் பயன்பாட்டுக்கு வராத சமுதாயக் கூடம்!

    By நமது நிருபர், புதுச்சேரி  |   Published on : 26th September 2016 09:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் பயன்பாட்டுக்கு வராத சமுதாயக்கூடம் மற்றும் மார்க்கெட் கழிப்பிடத்தால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
     புதுச்சேரி நகரின் மையமாக உள்ள நெல்லித்தோப்பு, மேரி நகராட்சி அலுவலகம் பின்புறம் கடந்த 2000-ஆம் ஆண்டில், அப்பகுதி ஏழை, நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டது.
     ஆனால், அந்தக் கட்டடத்தை மக்கள் பயன்பாட்டுக்கே கொண்டு வராமல் நகராட்சி பொறியாளர் அலுவலகமாக மாற்றி விட்டனர். பல ஆண்டுகளாக சமுதாயக் கூடம் நகராட்சி நிர்வாகத்தின் பயன்பாட்டுக்கே இருந்து வந்த நிலையில் இளைஞர் பெருமன்றத்தினர், பொதுமக்கள் நடத்திய பல்வேறு போராட்டங்களால் சமுதாயக் கூடத்தில் இருந்து பொறியாளர் பிரிவு வெளியேறியது.
     பின்னர், அதனை புதுப்பித்து, மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர பொதுமக்கள் கோரினர். இதற்காக பல கட்டப்போராட்டங்கள் நடத்தியும் எந்த பலனும் இல்லை. இதனால் அப்பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளில் நடைபெறும் சிறிய நிகழ்ச்சிகளைக் கூட பெரும் தொகை செலவு செய்து திருமண மண்டபங்களில் நடத்த வேண்டியுள்ளது.
     மீன் மார்க்கெட் கழிப்பிடம்: இதே போல நெல்லித்தோப்பு சிக்னல் அருகே மீன் மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இவர்களின் வசதிக்காக, இப்பகுதியில் ரூ.13 லட்சம் செலவில் கழிப்பறை 10 மாதங்களுக்கு முன்பு கட்டப்பட்டது. ஆனால், இதுவரை அந்தக் கழிப்பறை திறக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் எதிர்ப்புறத்தில் ரூ.5 அளித்து சிறுநீர் கழிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
     இதுகுறித்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றச் செயலர் பிரபு கூறியது: சமுதாயக் கூடம் கட்டப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை. பல கட்டப் போராட்டங்கள் நடத்தியும், மனு அளித்தும் எந்த பலனும் இல்லை. அதே போல முக்கியமான மீன் மார்க்கெட் அருகே கழிப்பறை கட்டப்பட்டு புதிதாகவே உள்ளது. மக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை. இரண்டு கட்டடங்களையும் பயன்பாட்டுக்கு கொண்டு வர மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai