சுடச்சுட

    

    கூனிச்சம்பட்டு தொகுப்பு வீடுகள்: ஆளுநர் ஆய்வு

    By புதுச்சேரி  |   Published on : 26th September 2016 08:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருக்கனூர் அருகே கூனிச்சம்பட்டில் உள்ள ஆதிதிராவிடர் தொகுப்பு வீடுகளில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஞாயிற்றுக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
     புதுவை அரசின் ஆதிதிராவிடர் நலத் துறை சார்பில் கூனிச்சம்பட்டில், ஆதிதிராவிடர்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டன. அந்த வீடுகள் பல ஆண்டுகளாக பயனாளிகளுக்கு வழங்கப்படாமல் இருந்தது.
     இந்த நிலையில் முந்தைய அரசின் ஆட்சிக்காலம் முடிவடையும் தருவாயில், தேர்தல் தேதி அறிவிப்புக்கு சில நாள்களுக்கு முன்பு அவசர அவசரமாக இந்த தொகுப்பு வீடுகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. இதையடுத்து பயனாளிகளும் அந்த வீடுகளில் உடனடியாக குடியேறினார்கள்.
     ஆனால், வீடுகள் ஒப்படைக்கப்பட்டு 6 மாதங்களாகியும், இதுவரை அந்த வீடுகளுக்கு அடிப்படை வசதிகளான மின்சாரம், குடிநீர் போன்ற வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை.
     இருள் சூழ்ந்து காணப்பட்டதால் அப்பகுதி பொதுமக்கள், பெண்கள் இரவு நேரங்களில் வெளிவர அஞ்சும் நிலை ஏற்பட்டது. மேலும் விஷ ஜந்துக்களும் படையெடுப்பும் உள்ளது.
     இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, அடிப்படை வசதிகளை மேற்கொள்ளுமாறு ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டார். அதன்படி சீரமைப்புப் பணிகள் செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையில், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கூனிச்சப்பட்டு தொகுப்பு வீடுகள் உள்ள பகுதியை ஞாயிற்றுக்கிழமை திடீர் ஆய்வு செய்தார். அங்கு கூடியிருந்த குடியிருப்புவாசிகளிடம் அவர் பேசுகையில், உழைத்து சம்பாதிக்கும் பணத்தை மதுவுக்காக செலவிடக்கூடாது. அந்த பழக்கத்துக்கு அடிமையாகக் கூடாது. உடல் ஆரோக்கியம், மனத் தூய்மை மிகவும் முக்கியம் என்றார் கிரண்பேடி. பின்னர், அடிப்படை வசதிகள் மேம்பாட்டுத் திட்டப்பணிகளை துரிதமாக மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
     அப்போது அங்கிருந்த பெண்கள் ஆளுநரிடம் கூறுகையில், 200 ஆண்டுகளாக நாங்கள் இப்பகுதியில் குடியிருந்து வருகிறோம் எங்களுக்கு மனைப்பட்டா கூட இதுவரை இல்லை. அடிப்படை வசதிகளும் இல்லாமல் உள்ளோம் என்றனர். அதற்கு பதிலளித்த ஆளுநர் கிரண்பேடி, தற்போது அடிப்படை பிரச்னைகள் தீர்க்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள கோரிக்கைகள் தொடர்பாக எம்.எல்.ஏ., கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர், பொதுமக்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு 15 நாள்களில் ஆளுநர் மாளிகையில் கூடி பேசி முடிவெடுக்கப்படும் என்றார்.
     மண்ணாடிப்பட்டு தொகுதி எம்.எல்.ஏ. டிபிஆர்.செல்வம், ஆட்சியர் சத்யேந்திர சிங் துர்சாவத், செய்தித்துறை இயக்குநர் உதயக்குமார், எஸ்.பி.தெய்வசிகாமணி, கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சீதாராமன் உள்பட பலர் பங்கேற்றனர்.
     கைப்பந்து விளையாடிய ஆளுநர்: பின்னர், அங்கு சிலர் கைப்பந்து விளையாடுவதை பார்த்த ஆளுநர் கிரண்பேடி, அவர்களுடன் இணைந்து சிறிது நேரம் கைப்பந்து விளையாடினார். அவரது தலைமையில் ஒரு அணியும், எம்.எல்.ஏ. செல்வம் தலைமையில் ஒரு அணியும் விளையாடினர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai