சுடச்சுட

  

  எம்பிபிஎஸ் பட்டம் பெறுவோர் கிராமப்புறங்களில் 2 ஆண்டுகள் பணிபுரிய வேண்டும்: சுகாதாரத் துறை அமைச்சர்

  By புதுச்சேரி,  |   Published on : 27th September 2016 10:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரியில் எம்பிபிஎஸ் பட்டம் பெறுவோர் கிராமப்புறங்களில் 2 ஆண்டுகள் பணிபுரிய வேண்டும் என சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.
   கோரிமேடு அன்னை தெரசா பட்டமேற்படிப்பு மற்றும் நலவழி அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் மருந்தியல் கல்லூரி சார்பில் உலக மருந்தாளுநர் தினவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
   புலமுதன்மையர் முரளி வரவேற்றார். மருந்தியல் கல்லூரி முதல்வர் கோபால், மருந்தாளுர் தின கருத்துரையாற்றி உறுதிமொழி வாசிக்க, அனைவரும் ஏற்றனர். நலவழித்துறைச் செயலர் பாபு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசு வழங்கினார்.
   அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கலந்துகொண்டு, தேசிய கருத்தரங்கான டெக்úஸா பார்மா விர்ட்ஸ் 2016-ன் இணையதளத்தை தொடங்கி வைத்துப் பேசியதாவது:
   அரசு மருத்துவ கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவருக்காக அரசு ரூ.1.23 கோடி செலவு செய்கிறது. ஆனால், எம்பிபிஎஸ் படித்து முடித்தவர்களை வெளியே சென்று பணியாற்ற சொன்னால், வீட்டுக்கு பக்கத்திலேயே இருக்கும் மருத்துவமனையில் பணி கொடுங்கள் என்கின்றனர்.
   இதே மாதிரியே பயிற்சி மருத்துவர்களும், ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு வரும் மருத்துவர்களும் இருக்கின்றனர். எனவே, எம்பிபிஎஸ் முடித்தவர்கள் 2 ஆண்டுகள் கட்டாயமாக கிராமப்புறங்களில் பணியாற்ற வேண்டும். இல்லையென்றால் சான்றிதழ் தரப்படமாட்டது. இதுதொடர்பான கோப்பில் 2 நாள்களுக்கு முன்பு கையெழுத்துயிட்டுள்ளேன்.
   மருத்துவம் மற்றும் மருந்துவம் சார்ந்த துறைகளில் பயிலும் மாணவர்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. பெற்றோர், ஆசிரியர்கள் பெருமைப்படும் வகையில் நல்ல இடத்துக்கு வர முயற்சி செய்ய வேண்டும் என்றார்.
   இதில் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர். இதைத் தொடர்ந்து, நிலவேம்பு குடிநீர் மற்றும் டெங்கு, சிக்குன்குனியா பற்றிய விழிப்புணர்வு துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டன. மேலும், மாணவர்கள் துப்புரவுப் பணியில் ஈடுபட்டனர். துணைப் பேராசிரியர்கள் நூருல் ஆலம், அண்ணபூர்னா வடிவேலு ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai