சுடச்சுட

  

  தனியார் மருத்துவமனை செவிலியர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம்: அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் வலியுறுத்தல்

  By புதுச்சேரி,  |   Published on : 27th September 2016 09:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.20 ஆயிரம் நிர்ணயிக்க வேண்டும் என புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் வலியுறுத்தி உள்ளது.
   இது குறித்து அதன் பொதுச்செயலர் எம்.பிரேமதாசன் வெளியிட்ட அறிக்கை: கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம், அரசு ஊழியர் சம்மேளனம், பயிற்சி பெற்ற செவிலியர் சங்கம் ஆகியவை இணைந்து தனியார் மருத்துவமனை, நிறுவனங்களில் பணிபுரியும் செவிலியர்களின் குறைந்தபட்ச ஊதியம், உரிமைகளுக்காக பல போராட்டங்கள் நடத்தியும், நீதிமன்றத்தை நாடியும் வழக்கு தொடரப்பட்டது.
   தற்போது அதை அடிப்படையாகக் கொண்டு மத்திய அரசு அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களில் உள்ள தனியார் மருத்துவமனை, நிறுவனங்களில் பணிபுரியும் செவிலியர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய பரிந்துரைகளையும், பணி நிலைமைகளை மேம்படுத்த சில நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.
   50 படுக்கைகளுக்கு கீழ் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும். 50 முதல் 100 படுக்கை வசதி கொண்ட தனியார் மருத்துவமனை செவிலியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக அரசு செவிலியர்களுக்கு தரப்படும் ஊதியத்தில் 75 சதவீதம் வழங்க வேண்டும்.
   100 முதல் 200 படுக்கை வசதிகள் கொண்ட தனியார் மருத்துவமனை செவிலியர்ளுக்கு 90 சதவீதம் ஊதியம் தரப்பட வேண்டும். 200 படுக்கைகள் வசதிகள் கொண்ட தனியார் மருத்துவமனை செவிலியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக அரசு செவிலியர்களுக்கு தரப்படும் ஊதியத்தை வழங்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளது. அரசு செவிலியர்களுக்கு இணையான விடுமுறை, வேலைநேரம், மருத்துவ பாதுகாப்பு, பயணப்படி, வீட்டுப்படி போன்றவற்றை வழங்க வேண்டும்.
   குறைந்தபட்ச ஊதிய பரிந்துரைகளையும், உரிமைகளையும் அமல்படுத்த ஆணையிட்டுள்ள மத்திய அரசுக்கு சம்மேளனம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
   மேற்கண்ட பரிந்துரைகளை புதுச்சேரி அரசு இங்குள்ள தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்களுக்கு அமல்படுத்தும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
   தனியார் பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள்: இதேபோல், புதுச்சேரியில் உள்ள தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியத்தை முடிவு செய்து புதுச்சேரி அரசு ஆணை வெளியிட வேண்டும். மேலும், அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் 300-க்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்பவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் பிரேமதாசன் தெரிவித்துள்ளார்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai