சுடச்சுட

  

  கடலில் மூழ்குவோரை காப்பாற்ற "லைப்சேவர்': புதுவை காவல்துறை புதுமுயற்சி

  By புதுச்சேரி  |   Published on : 28th September 2016 09:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுவையில் கடலில் மூழ்கும் நபர்களை காப்பாற்ற பயிற்சி பெற்ற காவலர்களை கடற்கரைகளில் நிறுத்த புதுவை காவல்துறை திட்டமிட்டுள்ளது.
   புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகள், குறிப்பாக இளைஞர்கள் பலர் மது அருந்திவிட்டு கடலில் குளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதில், சிலர் கடலில் மூழ்கி இறந்து விடுகின்றனர். மீனவ கிராமப் பகுதியில் கடலில் குளிக்கும் நபர்கள் அலையில் இழுத்துச் செல்லப்பட்டால் மீனவர்கள் சென்று காப்பாற்றி விடுகின்றனர்.
   ஆனால், மீனவ கிராமங்களுக்கு அப்பால் மற்றும் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் குளிப்போரை காப்பாற்ற முடிவதில்லை.
   இவ்வாறு கடலில் மூழ்கி இறப்போர் அனைவரும் சுற்றுலா பயணிகளாகவே உள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரை 11 சுற்றுலா பயணிகள் புதுவை கடலில் மூழ்கி இறந்துள்ளனர்.
   இதைத் தடுப்பதற்கான திட்டங்கள் இல்லாமல் புதுவை காவல்துறை திணறிவந்தது.
   இந்த நிலையில் புதிய திட்டத்தை கடலோர காவல்படை போலீஸார் தீட்டியுள்ளனர்.
   ஆபத்தான பகுதி: புதுவையில் உள்ள கடற்கரைகளிலேயே சின்ன வீராம்பட்டினம் முதல் கிருமாம்பாக்கம் பனித்திட்டு வரையிலான கடற்கரை பகுதி ஆபத்தானதாக உள்ளது. மேலும், புதுவை கடற்கரையில் கற்கள் கொட்டியுள்ள பகுதியில் மணல் திட்டு உள்ளதால் அங்கும் உயிரிழப்பு ஏற்படுகிறது. பெரும்பாலான உயிரிழப்புகள் இந்தப் பகுதியிலேயே நிகழ்கின்றன.
   ஆபத்தான பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்காமல் தடுக்க எச்சரிக்கை பலகைகளை கடலோர காவல் படை போலீஸார் வைத்துள்ளனர்.
   தற்போது, நீச்சல் பயிற்சி பெற்ற காவலர்களை கடற்கரையில் நியமிக்கும் திட்டத்தை உருவாக்கியுள்ளனர். இதன்படி, முதல்கட்டமாக புதுவையில் உள்ள மிகவும் ஆபத்தான 5 இடங்களை கண்டறிந்து இடத்துக்கு 2 நீச்சல் பயிற்சி பெற்ற போலீஸார் லைப் சேவர்களாக நியமிக்கப்படவுள்ளனர்.
   இந்த திட்டம் குறித்து கடலோர காவல்படை உதவி ஆய்வாளர் பிரவீண் குமார் கூறியது: கடற்கரையில் ஆபத்தான பகுதிகளை கண்டறிந்துள்ளோம். அந்த இடங்களில் தற்போது எச்சரிக்கை பலகைகளை வைத்துள்ளோம். இதுதவிர பீட் போலீஸார் அவ்வப்போது கடற்கரைக்குச் சென்று கடலில் சுற்றுலா பயணிகள் இறங்காமல் தடுக்கின்றனர்.
   பேரடைஸ் கடற்கரையில் சுற்றுலா துறையின் மூலம் வாழ்க்கை காப்பாளர்கள் (லைப் சேவர்ஸ்) நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல பல்வேறு கடற்கரைகளிலும் காவலர்கள் லைப் சேவர்களாக நியமிக்கப்படுவார்கள். இதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நீச்சல் பயிற்சி பெற்ற 2 பேர் ஒவ்வொரு கடற்கரையிலும் இருப்பார்கள்.
   இதற்காக நீச்சல் தெரிந்த காவலர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். விருப்பமுள்ள காவலர்கள் முன்வந்தால், அவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள். அவர்களுக்கு சட்டம் ஒழுங்கு, புலனாய்வு போன்ற பணிகள் வழங்கப்படமாட்டாது. நிரந்தரமாக லைப் சேவர்களாக இருப்பார்கள்.
   அவர்களுக்கான லைப் ஜாக்கெட், மிதவை, நவீன ஸ்டெச்சர் ஆகியவற்றை வாங்க வேண்டும். இதற்காக சுற்றுலாத் துறையின் உதவியை கேட்டுள்ளோம். அவர்களும் உதவுவதாக தெரிவித்துள்ளனர். முதலில் 5 இடங்களில் திட்டம் செயல்படுத்தப்படும்.
   மேலும், திட்டம் செயல்வடிவம் பெறும் வரை தாற்காலிக நடவடிக்கையாக உள்ளூர் மீனவர்களை நியமித்துக் கொள்ள ரிசார்ட் நிர்வாகிகளிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் பிரவீண்குமார்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai